சினிமா எடுக்க வரதட்சணை கேட்டு கொடுமை

கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது முகமது சுஹைல் என்பவர் பேஸ்புக் மூலம் பழக்கமானார்.

இந்த நட்பு நாளடைவில் காதலானது. இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். சுஹைல் துபாயில் பணியாற்றி வருவதாக மோபியாவிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார்.

மோபியாவும் பிரீலான்ஸ் டிசைனராக இருந்து அவருக்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் சுஹைல் திடீரென மோபியாவிடம் வந்து தான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் அதற்காக 40 லட்சம் தேவைப்படுவதாகவும் அதை மோபியாவின் வீட்டில் வாங்கித் தருமாறும் கேட்டுள்ளார்.

வரதட்சணை என்பதை சிறிதும் விரும்பாத மோபியா, சுஹைல் கேட்டதை மறுத்துவிட்டார். அன்றிலிருந்து அவருக்கு புகுந்த வீட்டில் பிரச்சினை தொடங்கியது. பின்னர்தான் சுஹைலுக்கு எந்த வேலையும் இல்லை என்பதும் முழுக்க மோபியாவின் வருமானத்தையே அவர் நம்பியிருந்ததும் தெரியவந்தது.

இதனால் தான் சுஹைல், அவரது தந்தை யூசூப், தாய் ருகியா ஆகியோர் மோபியாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது தந்தை தில்ஷத் வி சலீம் தெரிவிக்கிறார். அவ்வப்போது இவர்களது கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத தனது மகள் மோபியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலுவா போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.இதை விசாரிக்குமாறு அவர் ஆலுவா போலீஸ் நிலையத்திற்கு அனுப்பிவைத்தார்.

இதையடுத்து அந்த காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதீர், மோபியா மற்றும் சுஹைலின் குடும்பத்தினரை வரழைத்து பேசினார். இதனிடையே சுஹைலும் தலாக் நோட்டீஸை மோபியாவின் குடும்பத்திற்கு வழங்குமாறு மசூதியில் பதிவு செய்திருந்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் தலாக் என்பது பழங்காலத்து முறை, எனவே விவாகரத்து வேண்டுமானால் சட்டப்படி செய்யும்படி கூறிவிட்டனர்.

இந்த கோபத்தில் இருந்த சுஹைல், போலீஸ் நிலையத்தில் மோபியாவையும் அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசினார். இதனால் மோபியா சுஹைலை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோபியாவிடம் இன்ஸ்பெக்டர் சுதிர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அதனால் மோபியாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு அவர் சோர்வாக இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்தார். இதே நிலையில் வீட்டிற்கு வந்த சில மணி நேரத்தில் மோபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் “எனது சாவுக்கு கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப்- ருகியா, ஆலுவா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர் ஆகியோர் தான் காரணம். அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது” என எழுதியிருந்தார். இதையடுத்து இன்றைய தினம் முகமது சுஹைல் மற்றும் அவரது பெற்றோரை கோத்தமங்கலம் போலீஸ் கைது செய்துள்ளது.

அதே வேளை, இன்ஸ்பெக்டர் சுதிர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்திற்கு வெளியே ஆலுவா எம்எல்ஏ அன்வர் சதாத் போராட்டம் நடத்தினார்.

Related posts