புனித் ராஜ்குமாரின் பணியைத் தொடரும் விஷால்

புனித் ராஜ்குமார் மறைந்த நிலையில், அவர் பணியைத் தொடரும் வண்ணம் 1800 மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக விஷால் உறுதியளித்துள்ளார்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனிமி’. நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
‘எனிமி’ படத்தைத் தெலுங்கில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நேற்று (அக்டோபர் 31) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக ‘எனிமி’ படக்குழுவினர் அனைவரும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ‘எனிமி’ படம் பற்றிப் பேசுவதற்கு முன்பாக மறைந்த புனித் ராஜ்குமார் குறித்து சில வார்த்தைகள் பேசினார் விஷால்.
புனித் ராஜ்குமார் குறித்து விஷால் கூறியதாவது:
“புனித் ராஜ்குமார் நல்ல நடிகர் மட்டுமல்ல. நல்ல நண்பரும் கூட. அவரைப் போன்ற ஒரு பணிவான சூப்பர் ஸ்டாரை நான் கண்டதில்லை. அவர் ஏராளமான சமூக நலப் பணிகளைச் செய்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் புனித் ராஜ்குமாரிடமிருந்து 1800 மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கிறேன்”.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Related posts