ஆர்யன் கானுக்கு ஜாமீன்

மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்த பிறகு தந்தை ஷாருக்கானின் எதிர்வினை எப்படி இருந்தது என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்து உள்ளார்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த 2 ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோரை மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைத்தனர். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இரண்டு நாட்களாக நடந்து வந்தது. ஷாருக்கான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். இருதரப்பினரிடம் விசாரணை நடத்திய மும்பை ஐகோர்ட்டு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவரின் ஜாமீன் நிபந்தனைகள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆர்யன் கானின் நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமீச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஆர்யன் கான் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று தெரிகிறது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானை அவர் வழக்கறிஞர் சதீஷ் மணீஷிண்டேவும் அவர் குழுவினரும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

ஜாமீன் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதும் ஷாருக்கானிடம் ஆனந்த கண்ணீரை கண்டேன். கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவர் அதிகமான கவலையில் இருந்தார். அவர் சரியாக சாப்பிட்டிருப்பாரா என்பது கூட சந்தேகம்தான். அவர் காபியாக குடித்துக்கொண்டே இருந்தார். ஒரு காபி முடிந்ததும் அடுத்த காபியை தொடர்கிறார். இப்போது தான் அவர் முகத்தில் பெரிய நிம்மதியை என்னால் காண முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

Related posts