சமந்தாவுக்கு நீதிமன்றம் அறிவுரை

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது.

இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதால், அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா.

இந்த வழக்கு நேற்று ஐதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,

‘சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்.

பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள், பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள்’ என்று கூறினார்.

நடிகையின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சமந்தாவின் வழக்கறிஞர் முரளி நீதிமன்றத்தில் கோரியதை அடுத்து இந்த கருத்தை நீதிமன்றம் தெரிவித்தது.

வழக்கறிஞரின் வேண்டுகோளால் கோபமடைந்த கூடுதல் மாவட்ட நீதிபதி, “இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும்” என்று உறுதியாக கூறினார்.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. சமந்தாவின் வழக்கை, நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும்” என்று கூறியுள்ளார்.

Related posts