ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வரவேற்றுள்ள

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) மகிழ்ச்சியடைகிறது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு அமர்வுகளை எதிர்காலத்திலும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) மிக நெருக்கமாக கண்காணிக்கும்” இவ்வாறு, கடந்த 18 ஆம் திகதி அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிகப் பிரிவு) 1979 இன் 48 ஆவது சட்டப்பிரிவின் கீழ், சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், 177 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர், இம்மாதம் 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீனின் வழக்கு தொடர்பில் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தது.

உலகளாவிய ரீதியில் 13 பிராந்திய பாராளுமன்றங்களையும், 179 நாடுகளிலுள்ள பாராளுமன்றங்களில் அங்கத்துவத்தினை கொண்டதுமான அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU), ஒரு சர்வதேச அமைப்பாகும்.

1889 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஒன்றியம், ஜனநாயக ஆட்சியையும், அதன் பொறுப்புக் கூறலையும் ஊக்குவித்து, உத்வேகமளிக்கும் ஆரம்ப இலக்கை கொண்டதாகும். அத்துடன், இந்த ஒன்றியம் ஐ.நா பொதுச் சபையில் நிரந்தரமான அவதானிப்பாளர் தகைமையையும் பெற்றுள்ளது. ஐ.நா சபை விவகாரங்களில் குறிப்பிடத்தக்களவு தமது செல்வாக்கினை செலுத்தி வரும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU), ஐ.நா அமர்வுகளில் எண்ணற்ற பிரேரணை நிறைவேற்றலிலும் தனது பங்களிப்பினை நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) புலன்விசாரணைகள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படுவதுமில்லை.

மேலும், இந்த வருடம் நவம்பர் மாதம் ஸ்பெயின், மட்ரிட் நகரில் இடம்பெறவிருக்கும் அமர்வின் போதும், ரிஷாட் பதியுதீனின் கைது தொடர்பிலும், அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) தனது கவனத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts