அரண்மனை 3 – ஒழுங்காக கட்டி முடிக்கப்படாத மாளிகை

தன்னையும், தன் காதலன், மகளையும் கொன்றவர்களைப் பழிவாங்கும் பெண் பேயின் கதையே ‘அரண்மனை 3’.
ஜமீன்தார் சம்பத் தன் மகள், அக்கா, தங்கை உள்ளிட்ட உறவினர்களுடன் அரண்மனையில் வாழ்கிறார். தன் மகள் அந்த வீட்டில் பேய் இருப்பதாகச் சொல்கிறார். அதை நம்பாமல் மகள் பொய் சொல்வதாக நினைத்து ஹாஸ்டலுக்கு அனுப்பி, படிக்க வைக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு சம்பத் மகள் ராஷி கண்ணா, தன்னைத் தூக்கி வளர்த்த டிரைவர் மரணம் அடைந்ததை அறிந்து அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு வருகிறார். அப்போதும் அந்த அரண்மனையில் பேய் இருப்பது தெரிகிறது.
ராஷி கண்ணாவின் அத்தை பேத்தியான சிறுமிக்கும் பேய் நடமாட்டம் இருப்பது தெரிகிறது. அந்தப் பேயைத் தோழியாக நினைத்து அவரும் விளையாடுகிறார். அச்சிறுமியின் தந்தை சுந்தர்.சி வந்தவுடன் இந்த மர்மங்களை அறிந்து அதைக் களைய முற்படுகிறார். அதற்குப் பிறகு அதிர்ச்சி மிக்க சம்பவங்களும், அதற்கான பின்னணியும் தெரியவருகின்றன.
டிரைவர் எப்படி இறந்தார், பேய் ஏன் பழிவாங்க நினைக்கிறது, அதன் கடந்த காலம் என்ன, சம்பத் ஏன் மகள் மீது பாசத்தைக் காட்டாமல் எரிந்து விழுகிறார், பேயை விரட்ட முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு கடமைக்காக பதில் சொல்லி, சுவாரஸ்யமில்லாமல் செல்கிறது திரைக்கதை.
‘அரண்மனை 1, 2’ படங்களில் இருந்த அக்கறையும், மெனக்கெடலும் சுந்தர்.சிக்கு இப்படத்தில் கொஞ்சம் கூட இல்லை என்பது படத்தின் தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறார். 1,2வில் இருந்த அதே டெம்ப்ளேட்தான் இதிலும் தொடர்கிறது. ஆனால், அதில் எந்தப் புதுமையும், புத்திசாலித்தனமும் இல்லை. திரைக்கதை வேங்கட் ராகவன், வசனம் பத்ரி என்று டைட்டில் கார்டில் பார்க்க முடிகிறது. ஆனால், அவர்களும் தேவையான உழைப்பைக் கொட்டாதது துரதிர்ஷ்டம்.
சுந்தர்.சி, ராஷி கண்ணா, யோகி பாபு, விவேக், மனோ பாலா, சம்பத், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், அமித் பார்கவ், நளினி, மைனா நந்தினி ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கூட ஆர்யாவுக்கு இல்லை. நீங்கதான் ஹீரோ என்று ஆர்யாவிடம் சொன்னால் அவரே நம்பமாட்டார். அந்த அளவுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய காட்சிகளிலேயே வந்துவிட்டுச் செல்கிறார். பாடி பில்டர் போலவே இறுக்கமும் முரட்டு முகமுமாகக் காட்சி அளிக்கிறார்.
ராஷி கண்ணா கிளாமர் டாலாக வந்து போகிறார். விவேக்கின் கடைசிப் படம் இது. அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. யோகி பாபு, மனோபாலாவை வீணடித்திருக்கிறார்கள். செல் முருகனும் உள்ளேன் ஐயா அட்டனென்ஸ் போட்டுச் செல்கிறார். சுந்தர்.சி படத்தில் காமெடிக்குப் பஞ்சம் என்பதை நம்பவே முடியவில்லை.
சம்பத் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து கதாபாத்திரத்தின் தேவையை நிறைவேற்றுகிறார். ஆண்ட்ரியாதான் படத்தில் ஸ்கோர் செய்துள்ளார். அதுவே ஓரளவு ஆறுதல்.
பல காமெடி நடிகர்கள் இருந்தும் வராத சிரிப்பு வின்சென்ட் அசோகன் மீசையைப் பார்த்தால் வருகிறது. மேக்கப்பில் அவ்வளவு அசால்ட். கிராபிக்ஸ் காட்சிகளிலும் அதிக அலட்சியம். படத்தில் மனோபாலாவை அநியாயத்துக்கு உருவ கேலி செய்துள்ளனர். பல்லி மூஞ்சி, சுருட்டி வைச்ச பாய் மாதிரி இருக்க, தொடப்பக்கட்டைக்கு டவுசர் போட்ட மாதிரி இருக்க என்று அத்துமீறல் எல்லை மீறுகிறது. படத்தில் அழுத்தமான கதை இல்லை. அதை மறைப்பதற்காகவும், ஸ்பூஃப் பாணியிலும், ‘பாட்டாளி’,‘நான் ஈ’, ‘மகதீரா’, ‘ப்ரண்ட்ஸ்’ உள்ளிட்ட பழைய படங்களின் சாயல்கள் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன. இதுவும் கிரியேட்டிவிட்டி வறட்சியே.சத்யாவின் இசையில் ரசவாச்சி, தீயாகத் தோன்றி பாடல்கள் பரவாயில்லை ரகம். செங்காந்தளே மெலடி பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை பொருத்தமில்லை. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். ஃபென்னி ஒலிவர் இன்னும் கத்தரி போட்டிருக்கலாம்.
நகைச்சுவை உணர்வு குறித்து நம்பிக்கை இல்லாமல் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள நினைப்பவர்கள் மட்டும் ‘அரண்மனை 3’க்கு விசிட் அடிக்கலாம். ‘அரண்மனை 3’ அவசர அவசரமாக முடிக்க வேண்டும் என்று ஆரம்பித்து ஒழுங்காக கட்டி முடிக்கப்படாத மாளிகை போன்றே உள்ளது.

Related posts