டாக்டர்’ கொஞ்சம் ஏமாற்றம்தான்..

‘டாக்டர்’ படம் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்று எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டாக்டர்’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு திரையரங்குகளில் வார நாட்களில் கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மீண்டும் திரையரங்குகளுக்கு மக்கள் திரும்பியிருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள். தற்போது ‘டாக்டர்’ படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
“டார்க் காமெடி படம் என்பதால் முதல் காரியமாக தர்க்கரீதியான கேள்விகள் எழுப்பும் மூளையை தியேட்டருக்கு வெளியிலேயே ஒப்படைத்துவிட வேண்டும். எதையும் அசாதரணமாக அணுகும் நியாயஸ்தராக மிலிட்டரி டாக்டர். தன்னை நிராகரிக்கும் பெண்ணின் வீட்டில் நிகழும் ஒரு பிரச்சினையைத் தீர்க்க களமிறங்கி வெல்கிறார்.
சிவகார்த்திகேயன் தவிர மற்ற எல்லாப் பாத்திரங்களும் அங்க சேட்டை மற்றும் ஒன் லைனர்களால் காமெடி செய்கிறார்கள். ஆனால், ஹீரோ கிட்டத்தட்ட ரோபோ மாதிரி தலையைக்கூட அசைக்காமல் வசனம் பேசும் மேனரிசம் எடுபடவில்லை. அவர் இயல்பாகவே இருந்திருந்தால் அவரும் காமெடி வசனங்கள் பேசியிருந்தால் கூடுதல் பலமாகத்தான் இருந்திருக்கும்.ஏற்கெனவே பிரபலமான செல்லம்மா பாடலை படம் முடிந்தபிறகு வைத்திருப்பதால் சிலர் போய்விட, சிலர் நின்றபடி பார்க்கிறார்கள். முன்வரிசைகளில் பல இடங்களில் விழுந்து விழுந்து சிரிக்க..பின் வரிசைகளில் கப்சிப்பென்று மெளன விரதம் இருக்கும் முரண் புதுசு. (நான் இடைப்பட்ட வரிசையில்..)
எல்லோரும் சிரிப்புப்படம் என்று சொல்லிச் சிரிக்கத் தயாராகிப் போனால் என் வரையில் கொஞ்சம் ஏமாற்றம்தான். அல்லது எதற்கெல்லாம் சிரிக்க வேண்டும் என்பதில் என்னிடம் ஏதோ ரசனைக் கோளாறு இருக்கிறதோ?”
இவ்வாறு பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்

Related posts