Pandora Papers: ஜனாதிபதி CID யை விசாரணைக்கு பணிப்பு

பல்வேறு அரசியல் பிரபலங்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள், சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்கள் கொண்ட 11,903,676 ஆவணங்களை (சுமார் 1.19 கோடி /11.9 மில்லியன்) கொண்ட Pandora Papers மூலம், வரிகளிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையிலான கறுப்புப் பணம் அல்லது பண தூய்மையாக்க மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக, கண்டறியப்பட்டிருந்தது.

14 மூலங்கள் மூலம் பெறப்பட்ட, 11,903,676 கோப்புகள், 2.94TB தரவுகள் கொண்ட குறித்த ஆவணங்களை, 117 நாடுகளைச் சேர்ந்த 600 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், 140 ஊடக நிறுவனங்களுடன் இணைந்து ஒரு வருடமாக ஆய்வு செய்த புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) இவ்விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரீதியில் 90 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 300 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் இரகசிய சொத்து தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

‘பண்டோரா பேப்பர்ஸ்’ (Pandora Papers) உடன் தொடர்புபட்ட இலங்கையர்கள் மற்றும் அது தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி இவ்வுத்தரவை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.

நேற்றைய (05) அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று காலை ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக, ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவும் தெரிவித்திருந்தார்.

குறித்த தகவலுக்கமைய, ஆசிய பட்டியலில், இலங்கையில் இருவரது பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயர்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

நிருபமா ராஜபக்‌ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர், நிறுவனமொன்றை உருவாக்கி அதன் மூலம் லண்டன், சிட்னி நகரங்களில் சொகுசு தொடர்மாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்துள்ளதுடன், அதன் மூலம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக குறித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடேசன் மேலும் சில நிறுவனங்களையும் இரகசிய அதிகார வரம்புகளுடனான அறக்கட்டளைகளையும் அமைத்துள்ளதோடு, அவர் இலங்கை அரசாங்கத்துடன் வணிகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறவும், அதன் மூலம் கலைப்படைப்புகளை கொள்வனவு செய்யவும் அந்நிறுவனங்களை பயன்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட வெளிநாட்டினருக்கு சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் மூலம் கடந்த 2011 இல், திருக்குமார் நடேசன் 160 மில்லியன் டொலர் பெறுமதியான தனது அனைத்து சொத்துகளையும் முதலீடு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட முடியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) ஆய்வின்படி, Asiaciti Trust எனும் அறக்கட்டளையானது, சுமார் $ 18 மில்லியன் மதிப்புடைய நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்துள்ளது. இந்நிறுவனம் அவரது மனைவியின் அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக அவரை அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட தனிநபராக பட்டியலிடப்பட்டுள்ளது. 2016 இல் நடேசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் Asiaciti ஆனது, அவர்களது குடும்பத்தை அதன் உறுப்பினராக பேணி வந்துள்ளது.

திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம்
இதேவேளை, ‘பண்டோரா பேப்பர்ஸ்’ இல் தங்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து சுயாதீன விசாரணை நடாத்துமாறு, முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

“பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் உள்ள எந்தவொரு நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்” என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், தானும் தனது மனைவியும் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லையெனவும், தாங்கள் அப்பாவிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதன் அடிப்படையில், காலம் தாழ்த்தாது ஒரு சுயாதீன விசாரணையாளரை, (ஓய்வுபெற்ற மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியொருவரை) நியமித்து இந்த விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் என்னுடைய மற்றும் எனது மனைவியுடைய பெயரும் இதிலிருந்து விடுபடும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ்’ (Pandora Papers)

Related posts