கமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடுத்த மோடி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார்.

நேற்று காலை அவர் வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார்.

அவர் அங்குள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்தில் தரை இறங்கினார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர் (நிர்வாகம் மற்றும் வளங்கள்) பிரையன் மெக்கீன், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்பட அதிகார வர்க்கத்தினர் வரவேற்றனர்.

மோடி அங்கு சென்றிறங்கியபோது மழைச்சாரல் வீசிக்கொண்டிருந்தது. அதற்கு மத்தியிலும் மூவர்ணக்கொடியை ஏந்திக்கொண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். கோஷங்களை முழங்கினர்.

பிரதமர் மோடியுடன் கை குலுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கைகளை நீட்டினர். அப்போது அவர், அவர்கள் அருகில் சென்று பேசி கை குலுக்கியதுடன், படமும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப்பின் பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார். இதில் முதலாவதாக அமெரிக்காவை சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அந்தவகையில் ‘அடோப்’ நிறுவன தலைவர் சாந்தனு நாராயன், ‘ஜெனரல் ஆட்டோமிக்ஸ்’ நிறுவன தலைவர் விவேக் லால், ‘குவால்கம்’ தலைவர் கிறிஸ்டியானோ அமோன், ‘பர்ஸ்ட் சோலார்’ தலைவர் மார்க் விட்மர், ‘பிளாக்ஸ்டோன்’ தலைவர் சூவர்ஸ்மான் ஆகியோருடன் பிரதமர் மோடி நேருக்கு நேர் சந்திப்புகளை நிகழ்த்தினார். இதில் சாந்தனு நாராயன், விவேக் லால் ஆகியோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

பிரதமர் நரேதந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார். இருநாடுகளுக்கு இடையே பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசினர். வணிகம், பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத ஆற்றல் உருவாக்கம் குறித்தும் ஸ்காட் மோரிசனிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப்பேசினார். அப்போது பேசிய மோடி, சிறப்பான வரவேற்பளித்ததற்கு கமலாஹாரிசுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா 2வது அலையின் துவக்கத்தில் இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு நன்றி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் பைடன்-கமலா ஹாரிசின் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் புதிய உயரங்களை தொடும் என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் இந்தியா வரவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் மிகமுக்கிய பங்காளராக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தில் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றியதாக கமலா ஹாரிஸ் நினைவு கூர்ந்தார். இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள கமலா ஹாரிஸ், இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவது வியப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கண்டுபிடிப்பில் எவ்வாறு பங்களிப்பை அதிகரிப்பது என்பது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

கமலா ஹாரிசை சந்தித்தப்பிறகு ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு விவகாரங்களை ஆலோசித்தார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயுள்ள நல்லுறவு, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குவாட் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Related posts