வறிய மக்களின் துயர் துடைக்கும் தியாகி அறக்கட்டளை நிதியம்

கொவிட் காரணமாக உயிரிழப்பவர்கள் மற்றும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வோர் போன்றவர்களில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், வீதி விபத்துகளால் மரணிக்கும் பணவசதி இல்லாத ஏழ்மையான குடும்பங்களுக்கும் ‘தியாகி அறக்கொடை நிதியத்தின்’ தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகின்றார். அவரது இத்தகைய அர்ப்பணிப்பு நிறைந்த, மக்கள் சேவை குறித்து நாடெங்குமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் கடந்த 40 வருடங்களாக இன மத பேதம் பாராது பலதரப்பட்ட மக்களுக்கும் இவ்வாறு சமூக சேவைகளை ஆற்றி வருகின்றார். நலிவுற்ற மக்களுக்கு சேவை புரிவதில் அவரது அர்ப்பணிப்பு குறித்து மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர்.

அண்மைக் காலமாக வடக்கில் கொவிட் தொற்று காரணமாக மரணமடைவோரில் மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்கள் பலவற்றுக்கு தியாகேந்திரன் ஆற்றி வருகின்ற உதவிகள் மிகவும் பாராட்டத்தக்கவையாகும். கொவிட் தொற்று காரணமாக சம்பவிக்கின்ற மரணங்கள் குறித்து அவர் தனது விசேட கவனத்தைச் செலுத்தி வருகின்றார்.

அவர் தனது சொந்தப் பணத்தில் இந்த உதவிகளை வழங்கி வருவது தொடர்பாக வறிய மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்தும் தியாகேந்திரன் இந்த உதவிகளை வழங்கி வருகின்றார். யாழ்.மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைகின்றவர்களில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தோரின் நல்லடக்கத்துக்கு தனது அறக்கட்டளை ஊடாக தியாகேந்திரன் உதவி வழங்கி வருகின்றார்.

அவ்வாறு மரணமடைவோரின் உடல்களை யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, பருத்தித்துறை ஆகிய மூன்று வலயங்கள் ரீதியாக எடுத்துச் செல்வதற்கான பிரேதப் பெட்டிகளை அவர் வழங்கி வருகிறார். இதுவரை 30 இற்கும் மேற்பட்ட பிரேதப் பெட்டிகள் அவரது சொந்தப் பணத்தில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி மரணித்தவர்களின் உடலங்களை வைத்தியசாலையிலிருந்து தகனசாலை வரை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு மற்றும் தகனக் கிரியைகளுக்கான முழுமையான செலவுகளையும் பரோபகாரியான தியாகேந்திரன் தனது சொந்த நிதியில் தொடர்ச்சியாக வலய ரீதியாக வழங்கி வருகிறார் என்று தியாகி அறக்கட்டளை நிறுவகத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் கொவிட்19 காரணமாக உயிரிழக்கும் வறியவர்களின் நலன் பேண தியாகி வா. தியாகேந்திரன் நிறுவனம் ‘உதவியில் உதவி’ எனும் பெருந்திட்டத்தில் கைகொடுத்து உதவி வருவதை பல்வேறு பொது அமைப்புகள், வைத்தியசாலை நிர்வாகங்கள் பாராட்டி வருகின்றன. கல்விமான்கள் பலரும் இந்த முன்மாதிரியான சேவையைப் பாராட்டியுள்ளனர்.

தியாகி அறக்கட்டளை ஸ்தாபகரான தியாகி தியாகேந்திரன், இலங்கை அரசாங்கத்தின் covid-19 தடுப்பு நிதியத்திற்கு இதுவரை 2 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்கி உள்ளார். தியாகேந்திரன் வழங்கிய முதலாவது நிதியுதவியான ஒரு கோடி ரூபாவை அமைச்சர் காமினி லொக்குகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளித்திருந்தார்.

இரண்டாவதாக வழங்கிய ஒரு கோடி ரூபாவை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மூலமாக ஜனாதிபதியிடம் தியாகேந்திரன் வழங்கினார். இவரது இந்த பெரும் உதவி அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் பாராட்டுகளைப் பெற்றது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் வீதி விபத்துகளால் மரணமடைந்த பலரின் குடும்பங்களுக்கும் இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.குறிப்பாக அண்மையில் வீதி விபத்து காரணமாக உயிரிழந்த இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவரது குடும்ப வறுமை நிலையை உணர்ந்து அவரது பிள்ளைகளின் கல்விச் செலவையும், குடும்பத்தை சிறிது காலம் கொண்டு நடத்தத் தேவையான உதவிகளையும் அவர் வழங்கி வைத்துள்ளார்.

அதேசமயம் ஒரே சூலில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்ணின் குடும்பமொன்று மிகவும் வறுமை காரணமாக கஷ்டமான வாழ்க்ைக நடத்தி வந்ததை தியாகேந்திரன் அறிந்து கொண்டார். அவர்களது வாழ்க்கைச் சுமையை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக நிதி உதவிகளை அவர் வழங்கி வருகிறார்.

வடக்கு மாகாணத்துடன் மாத்திரம் தனது சேவையை மட்டுப்படுத்தாமல் கிழக்கு மாகாணத்திலும் தியாகேந்திரன் வறிய குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றார்.

வசதி குறைந்த முஸ்லிம் குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடு அமைத்துக் கொடுத்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல் நிர்வாகமொன்று இவரிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் இந்த உதவியைச் செய்துள்ளார்.

இதேபோன்று யார் தன்னிடம் உதவி என்று கேட்டாலும், அதனை ஆராய்ந்து உண்மையாக உதவி தேவைப்படுபவர்களுக்கு தயங்காது செய்வேன் என்ற உறுதிமொழியையும் ஊடகம் வாயிலாக தெரிவிக்க விரும்புகிறார் தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகரான தியாகேந்திரன்.

இவர் எந்தவிதமான அரசியல் பின்னணியையும் கொண்டிருக்காதவராவார். மக்களுக்கான சேவையை மாத்திரம் கவனத்தில் கொண்டு உதவிகள் வழங்கி வருகிறார். தான் எந்தக் கட்சியையும் சாராதவனென்றும், உண்மையான மக்கள் சேவகன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேவையுள்ள மக்கள் தனது உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் covid-19 காரணமாக மக்களுக்கு சேவையாற்றி வரும் சுகாதார பரிசோதகர்கள் 100 இற்கும் மேற்பட்டோருக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்து அவர்களது பாராட்டை கடந்த மாதம் பெற்றிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts