88,000 பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை

வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88,000 பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் இடம்பெற்று வரும் நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த அடிப்படையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளில் முதலாவது தடுப்பூசி இதுவரை 559,129 பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது வட மாகாணத்தில் இருக்கின்ற 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 86 சதவீதமாகும். இதே போன்று இரண்டாவது தடுப்பூசி 449,524 பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது 70 சதவீதமாகும்.

இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88,000 பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை. இவர்களில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இலங்கை முழுவதிலும் தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களை உடனடியாக வந்து பெற்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதேவேளை வட மாகாணத்தில் நேற்று 20 – 30 வயதுக்கு இடையிலான 190,550 பேருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.

சில மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. தடுப்பூசி போடும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவிப்பர். ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் தேசிய அடையாள அட்டையை காண்பித்து தங்களுடைய தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். நேற்று இந்த வயதினருக்கு வழங்கும் பணிகள் இடம்பெற்றாலும் இதே நிலையங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றார்.

Related posts