தமிழக முதலமைச்சருக்கு ராதா பாராட்டு

இலங்கையின் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் தொர்பாகவும் முகாம்களிலும் அதற்கு வெளியிலும் இருக்கின்ற தமிழர்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

இந்த செயற்பாடுகள் காரணமாக ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனை நடைமுறைபடுத்தி அகதிகள் என்ற அந்தஸ்த்தை நீக்கி அவர்களையும் இந்தியர்களாக அல்லது இலங்கையில் கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டு வருவதை பாராட்டுகின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியிருப்பது போல தமிழ் நாடு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் இலங்கையில் ஒரு அமைப்பாக அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்பட்டு வருவதன் காரணமாக கடந்த காலங்களில் பல விடயங்களை மக்களுக்காக சாதித்திருக்கின்றோம்.

அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாங்கள் தமிழ்நாடு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது என்பது மிகவும் இலகுவான காரியமாகும். நாங்கள் பாராளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்றோம் மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எங்களுடன் இணைந்து செயற்படுவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது. எனவே பல்வேறு காரணங்களால் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள வடகிழக்கு மக்கள், மலையக மக்கள் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் முகாம்களில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

அவர்கள் அகதிகளாக சென்ற நாட்டிலும் சரியான உதவிகள் கிடைக்கவில்லை இலங்கைக்கு திரும்பி வருவதிலும் பல பொருளாதார சிக்கல்கள் என பல்வேறு சிரமங்களை சந்தித்திருந்த வேளையில் தி.மு.க வின் தேர்தல் வெற்றி அதற்கு பின்னதான தமிழ்நாடு அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்பன பல புதிய நம்பிக்கைகளை இவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் முதன்முறையாக தனது அரசாங்கத்தின் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக ஒரு அமைச்சை ஏற்படுத்தியுள்ளமை பாராட்டிற்குறிய விடயமாகும். இந்த அமைச்சின் மூலமாக பல பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த அனைத்து முன்னெடுப்புகளையும் செய்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அவருடைய அரசாங்கத்திற்கு இலங்கை தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்ற அதே வேளை தொடர்ந்தும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts