பாஜக எம்எல்ஏக்களுக்கு மரியாதையும், நாகரிகமும் தெரியவில்லை

மேற்கு வங்க ஆளுநர் சட்டப்பேரவையில் பேசும்போது அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்களுக்கு சபை நாகரிகமும் தெரியவில்லை, மரியாதையும் தெரியவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தனகர் கடந்த 2-ம் தேதி சட்டப்பேரவையில் 18 பக்கங்கள் கொண்ட உரையில் சில வரிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால், அவையில் அமர்ந்திருந்த பாஜக எம்எல்ஏக்கள் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆளுநர் உரைக்கு இடையூறு செய்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், “மேற்கு வங்கத்துக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர், மத்தியில் ஆளும் பாஜக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர். அவரை சபையில் பேசுவதற்கு பாஜக எம்எல்ஏக்கள் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அவரைப் பேசவிடாமல் பாஜக எம்எல்ஏக்கள் அவமதித்து, அமளியில் ஈடுபட்டனர்.
பாஜகவின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் போன்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது இருக்கும் பாஜக முற்றிலும் வித்தியாசமானது.
இப்போதுள்ள பாஜக எம்எல்ஏக்களுக்கும், உறுப்பினர்களுக்கும் கலாச்சாரமும் தெரியவில்லை, நாகரிகமும், மரியாதையும் தெரியவில்லை” என மம்தா காட்டமாக விமர்சித்தார்.

Related posts