ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது

ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி, கையிருப்பிலுள்ளது. எனவே, நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடயத்தில் தளர்வுப் போக்குக்கு இடமே இல்லையென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:-

“எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

விவசாயிகளிடமிருந்து இம்முறை நாட்டரிசி நெல் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும், சம்பா அரிசி நெல் 52 ரூபாவுக்கும், பச்சை அரிசி நெல் 44 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும். மேற்படி விலைகளே நிர்ணயிக்கப்பட்டன. நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக நேற்று முதல் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகியது. ஏனைய காலப்பகுதி போல் தாமதம் ஏற்படாது. விவசாயிகளுக்கு உடன் பணம் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சம்பா மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோவை 98 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியுமென வர்த்தகத்துறை அமைச்சர் விலை நிர்ணயித்துள்ளார். அதனால்தான் ஒரு கிலோ நெல்லுக்கு 50 ரூபாவை நிர்ணயித்தள்ளோம். வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் அது நடைமுறைக்கு வருவதில்லையென்ற குற்றச்சாட்டு அரசுக்கு எதிராக உள்ளது. எனவே, இம்முறை சட்டம் கடுமையாக செயற்படுத்தப்படும். அதிக விலைக்கு இனி அரிசி விற்க முடியாது. அவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு இனிமேல் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சேதனப் பசளை மூலம் விவசாயம் என்ற முடிவிலிருந்தும் அரசு மாறாது” என்றார்.

Related posts