தடுப்பூசி போட்டால் உடலில் காந்த சக்தி ஏற்படுமா…?

மராட்டிய மாநிலம் நாசிக்கின் சிவாஜி சவுக்கை சேர்ந்தவர் அரவிந்த் சோனார் (67). இவர் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டபோது எந்தவித பிரச்சினையும் அவருக்கு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தனது உடலில் காந்த சக்தி அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.அவர் உடலில் எந்தப் பாகத்தில் இரும்பு பாத்திரத்தை வைத்தாலும் அவை டப்பென்று ஒட்டிக்கொள்ளத் தொடங்கின.

அவர் கையில் ஸ்பூன், நாணயங்களை வைத்தால் அப்படியே ஒட்டிக்கொள்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வியர்வையில் ஒட்டிக்கொள்கிறது என்றே நினைத்தார்கள். ஆனால் தொடர்ந்து இதுபோல நடக்க, இதனை அரவிந்த் ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்னொரு பக்கம், அரவிந்த்துக்கு உடம்பில் என்ன பிரச்சினையோ என்று அவர் குடும்பத்தில் குழப்பம் அடைந்துள்ளனர். அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்று சோதித்தனர். டாக்டர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு, அவர்களாலும் எதையும் சொல்ல முடியவில்லை. நாசிக் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்களும் அரவிந்த் வீட்டிற்கே வந்து சோதனை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து டாக்டர் அசோக் தோரட் கூறுகையில், அரவிந்த் சோனார் உடம்பில் நாணயங்கள், ஸ்பூன்கள் ஒட்டிக்கொள்ளும் வீடியோவை பார்த்தேன். தடுப்பூசி போட்டதன் விளைவா இது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தியே சொல்ல முடியும். முழுமையான ஆய்வுக்குப் பிறகே இது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியும். இப்போதைக்கு அறிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். மேற்கொண்டு ஏதாவது ஆய்வு தேவையெனில் நடத்தப்படும்” என்றார்.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் காந்த சக்தி ஏற்பட்டதாக அரவிந்த சோனர் கூறுவதை, மும்பையை சேர்ந்த ஜே ஜே மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் டட்யாராவே லஹானே மறுத்துள்ளார்.

அவர் கூறும்போது, ’உலகம் முழுவதும் ஏராளமானோருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. அதனால், அதற்கும் உடலில் இரும்புப் பொருட்கள் ஒட்டிக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதுபோன்ற எதுவும் நடக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts