‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸுக்கு வரவேற்பு

‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் சமந்தா நெகிழ்ச்சியுடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.
முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸன் வெளியாகியுள்ளது. ஜூன் 3-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் சீஸனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவே இரண்டாவது சீஸனையும் இயக்கியுள்ளனர்.
இந்த வெப் சீரிஸுக்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“அத்தனை விமர்சனங்களையும், பின்னூட்டங்களையும் படிக்கும்போது என் இதயத்தில் மகிழ்ச்சி நிறைகிறது. ராஜி என்றுமே விசேஷமான கதாபாத்திரமாக இருக்கும்.ராஜ் மற்றும் டிகே இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகியபோது, இதில் நடிப்பதற்கு உணர்வுபூர்வமாக, சமநிலையுடன் தயாராக வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. ஈழத் தமிழர்களின் ஆவணப் படங்களை க்ரியேட்டிவ் அணியினர் என்னிடம் பகிர்ந்தனர். அதில் ஈழப் போரில் பெண்களைப் பற்றிய கதைகளும் இருந்தன.
நான் அந்த ஆவணப்படங்களைப் பார்த்தபோது, நீண்டகாலமாக ஈழத் தமிழர்கள் அனுபவித்த பிரச்சினைகளையும், சொல்ல முடியாத துயரங்களையும் அனுபவித்தது தெரிந்து எனக்குத் திகைப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. அந்த ஆவணப் படங்களுக்கு சில ஆயிரம் பார்வைகளே இருந்ததை நான் கவனித்தேன். அப்போதுதான், ஆயிரக்கணக்கான ஈழ மக்கள் அவர்களின் உயிரை இழந்தபோது உலகம் எப்படி அந்தப் பக்கமே தன் கவனத்தைத் திருப்பவில்லை என்பது எனக்கு உறைத்தது.இன்னும் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தையும், வீடுகளையும் இழந்தனர். இந்த உள்நாட்டுப் போரின் காயங்களை மனதில், எண்ணத்தில் தாங்கி, கணக்கிலடங்காத இன்னும் பலர் தூர தேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
ராஜியின் கதை கற்பனை என்றாலும், அது நியாயமற்ற முறையில் நடந்த போரில் உயிரிழந்தவர்களுக்கும், போரின் வலியோடு, அந்த நினைவுகளோடு வாழ்பவர்களுக்கும் ஓர் அஞ்சலி. ராஜியின் கதாபாத்திரம் சமநிலையுடன், நுணுக்கத்துடன், உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
முன்னெப்போதையும்விட, வெறுப்பு, ஒடுக்குமுறை, பேராசை ஆகியவற்றை மனிதர்களாகிய நாம் ஒன்றிணைந்து எதிர்க்க, ராஜியின் கதை தெளிவான, மிகத் தேவையான ஒரு நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதில் நாம் தவறினால் இன்னும் கணக்கிலடங்காத பலர் அவர்களின் அடையாளத்தை, சுதந்திரத்தை, சுயமாக முடிவெடுக்கும் உரிமையை இழப்பார்கள்”.
இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

Related posts