எங்களுக்கு நஷ்டம்தான்: சல்மான் கான்

ராதே’ திரைப்படத்தைத் தற்போதைய சூழலில் வெளியிடுவதால் தங்களுக்கு நஷ்டம்தான் என்றாலும் அது பரவாயில்லை என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘ராதே’. ‘வெடரன்’ என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நெருக்கடியால் தள்ளிப்போனது. படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், திரையரங்கு மற்றும் இசை உரிமை என அனைத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடிக்கு சல்மான் விற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், கண்டிப்பாகப் படம் திரையரங்கில்தான் முதலில் வெளியாகும் என்று சல்மான் கான் உத்தரவாதம் அளித்திருந்தார்.
சல்மான் கானின் திரைப்படம் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று கூறப்படுவதால் ‘ராதே’ மீது திரையரங்க உரிமையாளர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், ஊரடங்கு தொடர்வதாலும், இனிமேலும் ரசிகர்களைக் காக்க வைக்க முடியாது என்பதாலும் படத்தை மே 13 அன்று திரையரங்கிலும், ஜீ ப்ளெக்ஸ் தளத்திலும் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் ’ராதே’ திரைப்படத்தைப் பார்க்க மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்ட வேண்டும்.
இந்த வெளியீடு குறித்து சமீபத்தில் பேசியிருருக்கும் சல்மான் கான், ” ‘ராதே’ 10-15 கோடியைக் கூடத் தாண்டாமல் போகலாம். எனது திரைப்படங்கள் அதிக வசூல் செய்தால் சிலர் மகிழ்ச்சியடைவார்கள், குறைந்த வசூல் பெற்றால் சிலர் மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும். ‘ராதே’ மூலமாக எங்களுக்கு நஷ்டம்தான். திரையரங்க வசூல் என்பது சுத்தமாக இருக்காது. என் வாழ்நாள் லட்சியமே 10 லட்ச ரூபாயை சம்பாதிப்பதுதான். எனவே எதுவாக இருந்தாலும் நான் நினைத்ததை விட அதிகம்தான்.திரையரங்க உரிமையாளர்களுக்கு உதவும் வண்ணம் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டோம். ஆனால், இப்போது மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் ரசிகர்கள் என்ன தவறு செய்தார்கள்?
இன்றைய இக்கட்டான சூழலில் மக்கள் மரணித்துக் கொண்டிருக்கின்றனர், ஆக்சிஜன் கிடைக்கவில்லை, மருந்து கிடைக்கவில்லை. அப்படி ஒரு நிலையில் என் படத்தைத் திரையரங்குக்கு வந்து தங்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்துப் பார்ப்பார்கள். அந்த நிலை வேண்டாம். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடு, மிகக் குறைந்த தொகை மட்டும் செலவு செய்து படத்தை வீட்டிலேயே பார்க்கலாம்.
நஷ்டத்தை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். ஆனால், தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்கள் அந்த சோகத்திலிருந்து வெளியே வர நினைக்கிறார்கள். அவர்கள் ‘ராதே’வைப் பார்க்கலாம். இப்போது இல்லையென்றாலும் பின்னொரு நாள் பார்க்கலாம். தங்களுக்குக் கொஞ்சம் உற்சாகம் தரும் பொழுதுபோக்கைப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். அதுதான் இப்போது ‘ராதே’ வெளியிடுவதன் நோக்கம். இந்தச் சூழலில் அவ்வளவு பணம் கொடுத்துத் திரையரங்குக்குச் சென்று ஒரு படத்தை நீங்கள் பார்க்க வேண்டாம் என்பதே எனது நோக்கம்” என்று சல்மான் பேசியுள்ளார்.
மே 12 அன்று துபாய் திரையரங்கு ஒன்றில் ‘ராதே’ திரைப்படத்தின் பிரத்யேகத் திரையிடல் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் திரையரங்க வெளியீடு என்பது சுத்தமாக இருக்காது என்பதால் தாங்கள் வாங்கிய விலையை விட சற்றே குறைவான விலைக்கு ஜீ தரப்பு மீண்டும் பேரம் பேசியிருப்பதாகவும், இதற்கு தயாரிப்புத் தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. மே 13 மதியம் 12 மணிக்கு மேல் ‘ராதே’ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts