வெற்றிமாலை சூட தயாராகுங்கள்: அதிமுக

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றும், வெற்றிமாலை சூட தயாராகுங்கள் எனவும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) வெளியாக இருக்கும் சூழலில் ‛வாக்குக் கணிப்பு’ – ‛எக்சிட் போல்’ என்ற பெயரில் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தி தொகுப்புகள், கழக உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதை கேட்டு பெருமிதம் கொள்கிறோம். தமிழகம் முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், வரலாறு வியக்கும் வகையில் இந்த தேர்தலிலும் அதிமுக தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே உறுதிப்பட தெரிவிக்கின்றன.

2016ல் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்து கருத்து கணிப்புகளும், மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததையும் பார்த்தோம். திமுக.,வினர் வதந்திகளை பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே அறியும். அவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில், மக்கள் நம் இயக்கத்தை இமயத்தின் உச்சியில் வீற்றிருக்க வைத்தனர். அந்த நிலையே இப்போதும் தொடரப் போகிறது. களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும். கடமைகள் அழைக்கின்றன; கண்மணிகளே, வெற்றிமாலை சூட தயாராகுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், கருத்து திணிப்புகளாக உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற கருத்து கணிப்புகள் தவறான முடிவை தந்துள்ளது.
2011 தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டது. அது பொய்யானது. 124 தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியானது. அ.தி.மு.க. 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

அதேபோல 2016 தேர்தலிலும், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.
தொகுதிக்கு 2, 3, 5 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றபோது இதுபோன்ற கருத்து கணிப்புகள் சரியாக அமைவதில்லை.எனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றார்.

Related posts