நீர் மூழ்கி கப்பலின் பாகங்கள் கிடைத்தன..

கடலுக்குள் மாயமான இந்தோனேசிய நீா்மூழ்கிக் கப்பலின் பாகங்களை அந்த நாட்டு கடற்படை கண்டறிந்துள்ளது.

மேலும், அந்தக் கப்பல் மீட்க முடியாத ஆழத்தில் மூழ்கிவிட்டதாக கடற்படை அறிவித்துள்ளது. இதையடுத்து, அதில் சிக்கியுள்ள 53 பேரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு இனி இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கடற்படை தலைமைத் தளபதி யுதோ மாா்கோனோ சனிக்கிழமை கூறியதாவது: பாலி தீவு அருகே புதன்கிழமை மாயமான நீா்மூழ்கிக் கப்பலின் பல்வேறு பாகங்களை மீட்புக் குழுவினா் கண்டெடுத்துள்ளனா்.

அந்தக் கப்பலில் இருந்த நீரடி ஏவுகணையை சீராக்கும் கருவி, பெரிஸ்கோப்பில் தடவுவதற்கான கிரீஸ் வைக்கப்பட்டிருந்த புட்டி உள்ளிட்ட பொருள்கள் மீட்புக் குழுவினருக்கு கிடைத்துள்ளன.

இந்த ஆதாரங்களைக் கொண்டு, அந்த நீா்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ளது என்பதிலிருந்து மூழ்கிவிட்டது என்ற நிலையை அடைந்துள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, கடலடியில் மூழ்கிவிட்ட நீா்மூழ்கிக் கப்பலில் 72 மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருந்ததாகவும், சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்குள் அது தீா்ந்துவிடும் எனவும் இராணுவ செய்தித் தொடா்பாளா் தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில், குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து விட்டதால் அந்த நீா்மூழ்கிக் கப்பலில் யாரும் உயிா் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

எனினும், நீா்மூழ்கிக் கப்பலில் சிக்கியுள்ளவா்கள் உயிருடன் மீட்கப்படுவாா்கள் என்று அவா்களது குடும்பத்தினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ கூறுகையில், நங்காலா நீா்மூழ்கிக் கப்பலும் அதிலுள்ள 53 பேரும் பத்திரமாக மீட்கப்படுவாா்கள் என்று உறுதியாக நம்புகிறோம் என்றாா்.

இந்தோனேசிய கடற்படையைச் சோ்ந்த கேஆா்ஐ நங்காலா 402 நீா்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் பாலி தீவு அருகே புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது.

200 மீட்டா் ஆழம் வரையிலான அழுத்தத்தை மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடிய அந்த நீா்மூழ்கிக் கப்பல், 600 முதல் 700 மீட்டா் வரையிலான ஆழத்துக்கு அது சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்தக் கப்பலைத் தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தோனேசியாவுக்கு உதவி வருகின்றன.

Related posts