ஜெனீவா மனித உரிமை கவுண்சில் கூட்டத்தொடரின் முடிவென்ன (எழுத்து )

ஜெனீவா மனித உரிமை கவுண்சில் கூட்டத்தொடரின் முடிவென்ன நேர்காணல்.. 22.03.2021

01. கேள்வி : வணக்கம் கி.செ.துரை அவர்களே தங்கள் நாட்டிற்கு அருகில் இருக்கும் சுவிற்சலாந்த நாட்டின் ஜெனீவா மனித உரிமை கவுண்சிலில் என்ன நடக்கிறது..?

பதில் : நல்ல வேளை அங்கு ஒரு கதிரையை சின்னமாக வைத்திருக்கிறார்கள்.. கதிரை என்பது அங்கு எதுவும் நடக்காது அப்படியே இருக்கும் என்பதை காட்டுகிறதோ என்று கேட்காமல் விட்டீர்களே அதுவே போதும்.

02. கேள்வி : இந்தத் தடவை அங்கு வகுக்கப்பட்ட மனித உரிமைகள் பொறிமுறைக்கு வெற்றி கிடைத்துவிட்டது பலர் கூறுகிறார்களே.. அது நடக்குமா..? இல்லை கிடைக்குமா..?

பதில் : நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்.. கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்.. இந்தப் பாட்டு பலருடைய தலைகளுக்குள் ஒலிக்கிறது போலும். அதனால்தான் இதுவரை கிடைக்காதென்பதை கிடைத்துவிட்டதாக பாடுகிறார்களோ தெரியவில்லை.

03. கேள்வி : அம்பிகை அம்மா தனது உண்ணாவிரத போராட்டம் வெற்றி என்கிறாரே.. சரியா..?

பதில் : அப்படியானால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தோல்வி என்கிறாரே.. அது பிழையா..?

04. கேள்வி : நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீதிபதி தீர்ப்பளிக்க முன் வாதாடிய வக்கீல்களே தன்னிச்சையாக தீர்ப்பை வழங்கி வழக்கை வெற்றிகரமாக முடித்த கதை போல தெரிகிறதே..?

பதில் : உங்களுக்கு தெரிந்திருக்கிறது அது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டுமே..

05. கேள்வி : மற்றவர்களுக்கு தெரிய முன்னர் அம்பிகையும் குமாரும் தமக்குள் பேசி தீர்த்திருக்கலாமே விவகாரம் ஏன் சந்திக்கு வந்தது..?

பதில் : மறைவாக பேசி தீர்த்திருந்தால் தீர்வு எங்கே என்று மக்கள் கேட்பார்களே..? கட்டிடம் பிழைப்பது தெரிந்தால் மேஸ்த்திரி தெருவில் நின்று சண்டையிட்டு ஓடுவது போலத்தான்.

06 கேள்வி : இந்த மோதலில் வென்றவர் யார்.. தோற்றவர் யார்..?

பதில் : அம்பிகையும், குமாரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. கட்டிடம் பிழையாக கட்டப்பட்டுவிட்டதை மக்கள் கண்டு பிடிக்காமல் கவனத்தை திசை திருப்பிவிட்டது இந்த மோதல்.. இது இருவருடையதுமான வெற்றி.. மற்றப்படி வழமைபோல மக்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

07. கேள்வி : அம்பிகை அம்மாவிடம் பாராட்டப்பட ஏதாவது உண்டா..?

பதில் : நிச்சயமாக திலீபன், அன்னை பூபதி படங்களை அருகில் வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த அவரின் துணிச்சல் யாருக்கு வரும்.

08. கேள்வி : அவரை பலமாக விமர்சித்தவர்களுடைய சிறப்பு என்ன..?

பதில் : வென்றால் அவர்கள் அம்பிகை பக்கம் தோற்றால் எதிர்ப்பக்கம் என்று காத்திருந்து முடிவைப்பார்த்து 17 நாட்கள் மதில் மேல் பூனைகளாக இருந்தது அவர்கள் சிறப்பு..

கேள்வி 09. : கஜேந்திர குமாரின் குரல் உண்மையானதா..?

பதில் : சொன்னதை செய்வேன் சொல்வதை சொல்வேன் வேறொன்றும் தெரியாது.. என்ற பாடலுக்கு மிக பொருத்தமானவர்.. எதுவுமே அவர் குரல் அல்ல. புலம் பெயர் தமிழரின் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்துள்ளார்.. வேறென்ன சொல்ல..

கேள்வி 10 : வண் மில்லியன் டாலர் பரிசு கேள்வி இந்தியா தமிழர் பக்கம் நிற்குமா..?

பதில் : நின்றால் அவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கும்..? ஆதரித்தால் இலாபமா..? எதிர்த்தால் இலாபமா..? எதை செய்தால் எமக்கு இலாபம் என்றுதான் சிந்திப்பார்கள். இலாபமுள்ள பக்கத்தில் நிற்பார்கள்.

கேள்வி 11 : அப்படியானால் தர்மம் என்ன ஆகும்..?

பதில் : இன்று அவ்வை இருந்திருந்தால் தர்மம் என்றால் இலாபம் என்று தனது ஆத்திசூடியை திருத்தி எழுதியிருப்பார்.

கேள்வி 12 : ஆதாயத்தில் சுழலும் உலகில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனீவா கூட்டத்தொடரானது தரப்பேகும் தீர்வு என்ன..?

பதில் : அதன் பெயரே கூட்டத்தொடர்தானே.. சின்னத்திரை தொடர் போலத்தான் அதுவும் சரியான தீர்வின்றி தொடரும்..

கேள்வி 13 : இதற்கு ஏதாவது நல்ல உதாரணம் இருக்கிறதா நமது நேயர்கள் எளிதாகப் புரிவதற்கு..

பதில் : வட இந்தியாவில் ஒரு தண்டவாளம் அமைத்தபோது அதற்குள் இருந்து ஒரு முனிவர் வெளியே வந்து பாரதப்போர் முடிந்துவிட்டதா என்று கேட்டாராம்.. அதுபோலத்தான் மனித உரிமை கூட்டத்தொடர் முடிந்துவிட்டதா என்று தமிழர் கேட்க நேர்ந்தாலும் ஆச்சரியப்பட இல்லை.

கேள்வி 14 : இந்த இக்கட்டான முடிவிலி நிலையில் நாம் என்ன செய்யலாம்..?

பதில் : பத்தாண்டுகளை தொலைத்தது போதும், விட்டு விடுதலை பெற்று நிற்பாய் அந்த சிட்டுக்குருவி போல என்று பாரதி சொன்னதை தவிர வேறு வழி தெரியவில்லை.

கேள்வி 15 : அப்படியானால் ஜெனீவா கதிரையையும் சங்கீத கதிரை சுற்றுவது போல இனியும் சுற்றி பயனில்லை என்று கூறுகிறீர்களா..?

பதில் : இல்லையில்லை.. அப்படி அதன் பெருமையை ஒரு காலமும் நாம் குலைக்கமாட்டோம், மனித உரிமை கவுண்சில் நாடுகளும் நம்மைப்போல அதன் பெருமையை குலைக்காமல் இருக்க வேண்டுமானால் தமிழருக்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். ஏழைகளாக கண்ணீருடன் நிற்கும் மக்களுடன் விளையாடும் நாடுகள் இதுவரை செய்தது தவறு.

கேள்வி 16 : நிறைவாக என்ன சொல்கிறீர்கள்..?

பதில் : எப்போதுமே நீதி என்பது வெற்றயோ தோல்வியோ அல்ல.. அதை நிலை நிறுத்த வேண்டியது உலகத்தின் கடமை என்ற நல் மனம் படைத்த நீதிக்கான உலக மக்கள் குரல் வெற்றி பெறும்.. ஜனநாயகம் வெற்றி பெறும். அந்த வெற்றி தமிழ் மக்கள் வெற்றியாகும் என்பதை நாம் என்றுமே மறுக்கவில்லை. மாறினால் மாறட்டும் இல்லையேல் மாற்றுவோம்.

கேள்வி : நன்றி வணக்கம்

Related posts