சிவபெருமானின் ஆசீர்வாதம் அனைத்துக்கும் பலமான சக்தி

உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக கருதும் சிவபெருமானின் ஆசீர்வாதம் சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கும் சிறந்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு பலமான உந்துசக்தி என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மகா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

——

மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதத்தை அனுஷ்டிக்கும் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்து பக்தி மயமான இச் சுப நன்னாளைப் போற்றி அனுஷ்டிக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியைக் கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட எம் இந்துக்கள், இப்புனிதமான விரதத்தை ஆன்மிக உணர்வுடன் அனுஷ்டித்து வருகின்றனர்.
நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான அவர்களது தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணைபுரியட்டும். மகா சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஆன்மிக விமோசனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் உயர்வான நம்பிக்கையாகும். தியானமே மனிதனை ஆன்மிக ரீதியிற் பக்குவப்படுத்தவல்லது என்றும் இருள் நீங்கி அறிவுஞானம் தளைத்தோங்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் மகா சிவராத்திரி தினத்தில் இந்து இறை அடியார்கள் அனைவரும் இரவு முழுவதும் கண்விழித்து விரதமிருந்து புண்ணிய கருமங்களில் ஈடுபட்டு இந்த மகோன்னத விரதத்தை அனுட்டிப்பதன் ஊடாகத் தமது ஆன்மிக வாழ்வினை வளப்படுத்துகின்றனர்.

இந்நன்னாளில் இறையருளால் நிச்சயம் ஆன்மிக பலம் பெறுவார்கள். மகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

—–
சிவனுக்கு உகந்த சிவராத்திரி தினம் இன்றாகும். சிவனுக்கு சோமவார விரதம் முதல் திருவெம்பாவை வரை பல்வேறு விரதங்களிருப்பினும் அம்பிகை வழிபட்ட முக்கியமான விரதம் மஹா சிவராத்திரி விரதம்.

எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ – என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் எனும் நூல் தெரிவிக்கிறது.

சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் கண் விழித்து தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டாலும் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்கள் எனக் குறிப்பிடப்படும் முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம்,தொண்டேஸ்வரம் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. சிவராத்திரி மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று பலவகைப்பட்டாலும் மகா சிவராத்திரிதான் தலையாயது மூன்றுகோடி சிவராத்திரி தினங்கள் விரதம் இருந்த புண்ணியம் சிவராத்திரியில் விரதமிருந்தால் கிட்டும் என்பார்கள்.

Related posts