இம்ரான் கானின் இலங்கை விஜயமும், தாக்கங்களும்

இலங்கை தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடாகும். அது சீனா மற்றும் இந்தியா போன்ற தென்னாசிய நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவைப் போலவே பாகிஸ்தானுடன் கொண்டிருக்கும் சிநேகபூர்வ, இராஜதந்திர உறவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இம்ரான் கானின் இலங்கை விஜயமும், அது தென்னாசியப் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் இன்றியமையாதவை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 05 ஒக்டோபர் 1952 இல் லாகூரில் பிறந்தார். இவர் பொறியியலாளரான இக்ராமுல்லா கான் நியாஜியின் ஒரே மகன் ஆவார். லாகூரில் உள்ள அட்ச்சன் கல்லூரி (Aitchison College மற்றும் கதீட்ரல் பாடசாலையிலும் (Cathedral School), பின்னர் இங்கிலாந்தில் உள்ள றோயல் இலக்கண பாடசாலை வொர்செஸ்டரிலும் ( Royal Grammar School Worcester ) கல்வி கற்றார்.

இங்குதான் இவர் கிரிக்கெற்றில் அதிக ஆர்வம் கொண்டார். 1972 ஆம் ஆண்டில், அவர் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கேபிள் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பயின்றார். 1975 இல் பட்டம் பெற்றார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் இரு தசாப்தங்களாகக் கிரிக்கெற் உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் அவர்.

தனது ஆளுமையாலும், தன்னார்வத் தொண்டுகளாலும் உலகின் கவனத்தை ஈர்த்தார். 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெற் அணிக்குத் தலைமை தாங்கி உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளவும் வழியமைத்தார். 1996 ஆம் ஆண்டு ‘பாகிஸ்தான் தஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப்’ (PTI) என்ற கட்சியை அமைத்தார்.

அவரது கட்சி 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. மக்கள் சார்பாக 22 ஆண்டு கால அரசியல் போராட்டத்திற்குப் பிறகு அவர் பாகிஸ்தான் பிரதமரானார். பிரதமர் கானின் இலங்கை வருகை இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இருதரப்பு உறவுகளை அர்த்தமுள்ளதாகவும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் இது இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அவரது இரண்டு நாள் பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்பு, கலாசாரம் மற்றும் பிற துறைகள் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இலங்கை-பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகள்:

பாகிஸ்தான் தென்னாசியாவின் சில நாடுகளுடன் பேணி வரும் உறவுகளைப் போலவே இலங்கையுடனான தனது இராஜதந்திர உறவுகளை வளர்க்கவும் வலுப்படுத்தவும் விரும்புகின்றது. வர்த்தகம், வணிகத்துறை, கலாசாரம் மற்றும் பதுகாப்பு என்பன இங்கே மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. பாகிஸ்தானில் தொடர்ந்து ஆட்சி செய்த ஜனநாயக, இராணுவ அரசுகள் இலங்கையுடனான உறவுகளைப் பேணிய அதேவேளை, அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளன.

பாகிஸ்தான் கடந்த சில தசாப்தங்களாக இலங்கையுடனான இடைவிடாத, சமநிலைத் தன்மையுடனும் ஒத்துழைப்புடனும் கூடிய உறவுகளைப் பேணி வந்துள்ளமை கண்கூடு.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் போது இலங்கை இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான அதிக நெருக்கத்தைக் கொண்டிருந்த போதும், பாகிஸ்தான் இலங்கையுடனான தனது உறவுகளை விசாலிக்க எத்தனித்தது. காஷ்மீர் தொடர்பிலான இந்தியாவின் கொள்கையை இலங்கை அரசு ஆதரித்ததோடு இது தொடர்பில் இந்தியா மேற்கொள்ளும் எத்தகைய தீர்மானத்தையும் அது வரவேற்றது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) அமர்வுகளை இலங்கை தவிர்த்து வந்தமையை நாம் அறிவோம்.

இத்தகைய அபிப்பிராய பேதங்களுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் பாகிஸ்தான் இலங்கையுடனான இருதரப்பு உறவில் எத்தகைய விரிசல்களும் ஏற்படாத வண்ணம் தனது உறவுகளைக் கவனமாகப் பேணி வந்துள்ளது. இலங்கையின் இன்றைய அரசு பாகிஸ்தானுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

1971 ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தானுடனான (தற்போதைய பங்களாதேஷ்) போரின் போது பாகிஸ்தான் விமானங்கள் தனது வான்பரப்பினூடாகப் பறப்பதற்கு இந்தியா தடை விதித்த போது, இலங்கை பாகிஸ்தானிய விமானங்களுக்கு இலங்கையில் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கு இடமளித்தது.

இராணுவ ஒத்துழைப்பு:

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையேயான யுத்தத்தின் போது பாகிஸ்தான் அரசு ஆதரவுகளை இலங்கை அரசுக்கு வழங்கியது. ஏனைய நாடுகள் உதவிகள் வழங்காதிருந்த அந்தக் கால சூழ்நிலையில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைத்தது. இது இரு நாட்டு இராணுவத்திற்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு உணர்வையும், நம்பிக்கையையும் வலுப்படுத்தியது எனலாம்.

இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்றும் பாகிஸ்தானின் புகழ் பூத்த பல இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளின் செயலமர்வுகளில் பங்குபற்றி வருகின்றனர். ‘குவெட்டா’ எனும் இடத்தில் அமையப் பெற்றுள்ள கல்லூரி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இரு நாட்டுக் கடற்படையினருக்குமிடையேயான உறவுகளும் இது போன்று இறுக்கமானதே. இலங்கையின் இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் பலர் பாகிஸ்தானின் பாதுகாப்புக் கருத்தரங்குகளிலும், கண்காட்சிகளிலும் பங்குபற்றி வருகின்றனர்.

இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் கடந்த வருடம் இரு நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்குமிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானின் குடியரசு தின அணிவகுப்பிலே இலங்கை ஜனாதிபதி பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த காலங்களிலும் இலங்கை ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் இத்தகைய அணிவகுப்பிலே முக்கிய பிரமுகர்களாகப் பங்குபற்றியுள்ளனர்.

இலங்கையின் புவியியல் ரீதியிலான இட அமைவு அதன் மிகப் பெரும் சொத்து எனலாம். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகள் அதன் வெளியுறவுக் கொள்கையிலே உந்துசக்தியாக அமைவதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விளையாட்டுத் துறை:

இரு நாடுகளுக்குமிடையேயான விளையாட்டுத் துறை தொடர்பிலான உறவும் இத்தகையதே. 2009 ஆம் ஆண்டு இலங்கைக் கிரிக்கெற் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும், இரு நாடுகளும் புரிந்துணர்வோடு விளையாட்டுத் துறை சார்ந்த உறவுகளில் வீழ்ச்சி ஏற்படாத வண்ணம் செயற்பட்டன.

குவாடர் மற்றும் கராச்சியை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுடன் இணைப்பது பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு சர்வதேச இராஜதந்திரத்தின் நன்கு அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இரு நாடுகளும் இந்த பரந்த அடிப்படையிலான உறவை அதன் பரஸ்பர நன்மை காரணமாக மதிக்கின்றன. மேலும் இது எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வருகை தந்த போது இந்நாட்டின் சிறுபான்மையின தமிழ் மக்களுக்கு எதிர்பார்ப்புகள் காணப்பட்டதைப் போலவே தற்போது இம்ரான் கானின் வருகையின் மூலம் மற்றொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களிடம் பல்வேறு அபிலாஷைகளும், எதிர்பார்ப்புக்களும் துளிர்விட்டுள்ளன.

அத்துடன் தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இரு நாட்டினதும் பிரதமர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குமிடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். முக்கிய இராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தைகளுடன் பாதுகாப்பு, முதலீடு,வர்த்தகம், சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அவர் இலங்கையில் தங்கியிருந்த இரு நாட்களிலும் மேலும் பல்வேறு உயர் மட்டக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு உடன்படிக்கைகள் பலவும் கைச்சாத்திடப்பட்டன. இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சினையாகவுள்ள ஜனாஸா எரிப்பு விவகாரம் எந்தளவு முக்கியம் பெறும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சட்டத்தரணி Z.A.அஷ்ரஃப் M.A

சர்வதேச உறவுகள்

(கொழும்பு பல்கலைக்கழகம்)
——–
வறுமையை ஒழிப்பதற்காக செல்வ செழிப்பை ஏற்படுத்துவது அவசியம். செல்வத்தை ஏற்படுத்துவதற்கு பிராந்திய வணிகம், முதலீடுகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இதற்காக பிராந்தியத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொழும்பில் நேற்று (24) நடைபெற்ற பாகிஸ்தான் , இலங்கை வர்த்தக முதலீட்டு மாநாட்டில உரையாற்றினார்.

சுற்றுலாத்துறையில் இலங்கையும் பாகிஸ்தானும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன. பாகிஸ்தானிலுள்ள பழமைவாய்ந்த பௌத்த நாகரீகங்களை பார்வையிட வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தமது நாட்டிற்கு வருகை தருமாறு அவர் இலங்கையின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் குழுவிற்கு கோரிக்கை விடுத்தார். இலங்கை வர்த்தக தலைவர்களுடன் சிறந்த உறவுகளை பேண முடியும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கை வெளியிட்டார்.

பிராந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலம் உயர்ந்தபட்ச வெற்றிகளை அடைந்து கொள்ள முடியும் என்றும் அவர் இதன் போது நம்பிக்கை வெளியிட்டார்.

துணைக் கண்ட நாடுகளுக்கிடையில் சமாதானத்திற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டு வறுமையை ஒழிப்பதற்காக ஒன்றிணைவது அவசியம் என்று சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் பிரதமர் அயல் நாடுகளுடன் நல்றவைப் பேணுவதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தியை மேற்கொண்டு வணிக நட்புறவுக்கான சூழலை உறுதி செய்த முடியும் என்றும் தெரிவித்த அவர் தான் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இந்தியாவுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்ததாகவும் கூறினார்.

துணைக் கண்டத்தில் நிலவும் அனைத்துபிரச்சினைகளும் கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.கிரிக்கெட் வீரராக இருந்த தாம் வறுமையை ஒழிக்கும் நோக்குடன் அரசியலில் பிரவேசித்ததாக குறிப்பிட்ட அவர் அயல்நாடுகளுடன் சிறந்த தொடர்புகளை பேணுவது அவசியமாகும். பிராந்தியத்தின் சமாதானமும் அவசியம் என்று அவர் கூறினார்.

இதற்காக இந்தியாவுடன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டாலும், இந்தியா அமைதிக்கான பாதையை தெரிவு செய்யும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சுட்டிக்காட்டினார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகளை நீக்குவதில் பாகிஸ்தான் முக்கிய பங்களிப்பை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்த பிமரதமர் இம்ரான் கான் , ஐரோப்பாவில் ஒன்றுக்கொன்று யுத்தத்தில் ஈடுபட்ட நாடுகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த நாடுகளுக்கு இடையில் வலுவான வர்த்தக உறவுகள் காணப்படுவதினால் இந்த நாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவடைந்ததாகவும் அவர் கூறினார்.

இது துணைக்கண்ட நாடுகளுக்கும் பொருந்துவது அவசியமாகும். பாகிஸ்தானில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தமது நாட்டின் கொள்கை முழுமையாக மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உப கண்டத்தில் வியாபார நடவடிக்கைகளை வலுவான முறையில் மேற்கொள்வதற்காக வர்த்தக வாய்ப்புக்கள் விரிவாகக் காணப்படுகின்றன. துணைக் கண்டத்தின் முழுத் தொகை 1.3 பில்லியனாகும். துணைக் கண்டத்தில் வசிப்பவர்கள் தமது வல்லமையை இதுவரை உணர்ந்துகொள்ளவில்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேலும் தெரிவித்தார்.

Related posts