உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வேளையில் இறக்குமதி செய்யப்பட்ட 6,000 வாள்கள்

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற சமகாலத்தில் சில தரப்பினரால் 6,000 வாள்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கை எதிர்வரும் மார்ச் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம், பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த ரிட் மனு மீதான விசாரணை எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி நடைபெறும் போது இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று பொலிஸ் மாஅதிபர் சி.டி விக்கிரமரத்ன உள்ளிட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவு முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயாயா ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன, நீதிமன்றத்திற்கு நேற்றையதினம் விடயங்களை தெளிவு படுத்திய போது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் சில தரப்பினரால் நாட்டுக்கு 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related posts