பிரதமரின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு

கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பலர் ட்விட்டர் பதிவுகளை மேற்கொண்டு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இலங்கை பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதம் வரவேற்கத்தக்கது என பாகிஸ்தான் பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இலங்கைகான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொவிட் 19 தொற்றுக்குள்ளான மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் மேற்கொண்ட அறிவிப்பை வரவேற்பதாகவும். உறவினர்களை இழந்தவர்கள் அவரின் மத சடங்குகளுக்கு அமைவாக மற்றும் சர்வதேச பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வாய்ப்பளித்து இது விரைவில் செயற்படுத்தப்படும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலெயினா பீ. டெப்லிட்ஸ் தனது ட்விட்டர் பதிவில், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் தகனத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பிரதமரின் அறிவிப்பு சர்வதேச பொது சுகாதார தரங்களுக்கு இணங்குவதோடு மத நடைமுறைகளை மதிப்பளிக்கும் மதிப்புக்குரிய செயற்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இலங்கை முஸ்லிம்கள், நிபுணர்கள், சிவில் மற்றும் அரசியல் குழுக்கள் அடக்கம் செய்வதற்கான உரிமையை கோரியிருந்த போதும் ஜெனிவா மாநாடு ஆரம்பமாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் அதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்திருந்தார்.

“தமது உறவினர்களை இழந்தவர்களுக்கு நீங்கள் ஒரு வருடமாக எவ்வளவு வேதனையை அளித்துள்ளீர்கள்! என்ன ஒரு கொடூரமான, இழிந்த ஆட்சி! ” என மேலும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Related posts