இலங்கை விமானப்படைக்கு முதல் பெண் விமானிகள்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, இலங்கை விமானப்படையில் இரண்டு பெண்கள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.டி.பி.எல். குணரத்ன மற்றும் ஆர்.டி. வீரவர்தன ஆகிய விமானி அதிகாரிகளே (Pilot Officer) இவ்வாறு முதலாவது பெண் விமானிகளாக வெளியேறியுள்ளதாக, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இன்று (16) திருகோணமலையிலுள்ள இலங்கை விமானப்படை சீனத் துறைமுக அகடமியில் இடம்பெற்ற கெடேட் அதிகாரிகளின் வெளியேற்ற நிகழ்விலேயே இவர்களுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட, 61ஆவது கெடேட் அதிகாரிகளின் வெளியேற்ற அணிவகுப்பு, மற்றும் 13ஆவது பெண் கெடேட் அதிகாரிகளின் வெளியேற்றம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக 33 மற்றும் 34ஆவது தொகுதியினரின் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வுகள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்பின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது அனைத்து துறைகளிலும் திறமை காட்டிய கெடேட் அதிகாரியாக, பைலட் ஒபிசர் ஆர்.டி. வீரவர்தன தெரிவு செய்யப்பட்டதோடு, அவருக்கு பெருமைக்குரிய வாள் (“Sword of Honour”) கையளிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படை வரலாற்றில் முதன் முறையாக பெண் அதிகாரி ஒருவருக்கு இந்த தகைமை வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts