நம்முடைய கலாச்சாரம், வெற்றி, காதலின் அங்கம் எஸ்பிபி

நம்முடைய கலாச்சாரம், வெற்றி, காதலின் அங்கம் எஸ்பிபி என்று ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்.25) காலமானார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் எஸ்பிபி தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார். இருவரும் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் ஆகியவற்றோடு எஸ்பிபி குறித்தும் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.
காணொலியில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:
”என்னுடைய ஆரம்பக் காலங்களில் மிகப்பெரிய அளவில் கொண்டாடியது 1982-83 இல் மியூசிக் அகாடமியில் எஸ்பிபியின் பிறந்த நாளைத்தான். அதைத் தொடர்ந்து ‘ரோஜா’ படத்துக்காக இருவரும் இணைந்தோம். ‘காதல் ரோஜாவே’ பாட்டைப் பாட வந்திருந்தார் எஸ்பிபி. அப்போது மிகச்சிறிய அளவில் இருந்த என்னுடைய ஸ்டுடியோவைப் பார்த்து, ‘இங்கு இசையமைக்க முடியுமா?’ என்று ஆச்சரியப்பட்டார். ‘சினிமா துறைக்கான இசையை இந்த ஸ்டுடியோவால் உருவாக்க முடியுமா?’ என்று சந்தேகத்தோடும் கேட்டார்.
பாடலுடன் படம் வெளிவந்ததும் என்னிடம் வந்தவர், ‘இசையை எங்கிருந்து வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்பதை நிரூபித்து விட்டீர்கள்’ என்றார்.
எஸ்பிபி ஒரு பாடலை 15 நிமிடங்களில் கற்றுக் கொள்வார். 10 நிமிடங்களில் பாடிவிடுவார். உடனே அடுத்த ரெக்கார்டிங்குக்குச் செல்வார். இத்தனை வேகமான, நிபுணத்துவம் பெற்ற, அடக்கமான ஒரு பாடகரை நான் கண்டதே இல்லை.
எதையுமே முடியாது என்று சொல்லாதவர்
அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட அற்புதமான பாடங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எதையுமே முடியாது என்று சொன்னதில்லை. நடிப்பு, இசையமைப்பாளர், பாடகர் என எதுவாக இருந்தாலும் சரி. எல்லாவற்றையும் பரீட்சித்துப் பார்க்க எப்போதும் தயாராக இருந்தார்.
வாழ்க்கை, இசை, அன்பு என எல்லாவற்றிலும் முழுமையான வாழ்வை அவர் வாழ்ந்தார். தமிழர், தெலுங்கர், மலையாளி என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவராலும் நேசிக்கப்பட்டார். நம்முடைய வெற்றி, காதல், பக்தி, மகிழ்ச்சி என எல்லாவற்றிலும் அவரின் குரல் அங்கம் வகிக்கும்.
அவர் ஒவ்வொரு கதாநாயகனுக்கும் தனி ஆளுமையைக் கைவசம் வைத்திருப்பார். அவரைப் போல பல்வேறு துறைகளில் திறமையான ஒரு பாடகர் இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை.
அவரின் இசை, வாழ்க்கை மற்றும் ஆளுமையை நாம் கொண்டாட வேண்டும்.
எஸ்பிபி நம் கலாச்சாரத்தின் ஓர் அங்கம். நம் வெற்றி, காதல், பக்தி, சந்தோஷத்தில் பங்குகொண்டவர் எஸ்பிபி. கடவுள் தனக்களித்த பரிசை, அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதனால் அவரை நினைத்துக் கவலைப்படாமல், கொண்டாடித் தீர்க்க வேண்டும்”.
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Related posts