இந்திய – இலங்கை பெளத்த உறைவை மேம்படுத்த 15 மில். டொலர் நிதி

இந்திய இலங்கை பௌத்த உறவை மேம்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் காணொளி மூலமான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.
இதன்போது, இந்தியா எப்போதும் தனது அயல் நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது நாகரிகங்களுக்கு வழிகாட்டுகின்றன. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கான முதல் சேவையில் இலங்கை பௌத்த யாத்திரிகர்களை வரவேற்க இந்தியா ஆவலுடனுள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்தர்.
இதன்போது பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு தனது வாழ்த்துக்களை நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றி உங்கள் தலைமை மீதான நம்பிக்கையை காட்டுகிறது.இந்த வெற்றி இந்திய -இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வாய்ப்பளிக்கும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு எப்போதும் அயல் நாடுகளுக்கு முதலிடம் என்ற எனது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் சாகர் கோட்பாட்டின் படி, இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றலை வழங்குவதற்கு தேவையான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த உரையாடலின்போது, கடந்த மாதம் 03ஆம் திகதி நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை கட்டுப்படுத்த விரைவான உதவியை வழங்கியமைக்காக இந்தியாவிற்கு மஹிந்த ராஜபக்ஷ பாராட்டும் தெரிவித்தார்.

Related posts