அரசாங்கங்களுக்கு உதவுவது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும்

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கு உதவுவது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும் என்று காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் தேவைகளை மிகச் சிறந்த முறையில் புரிந்துகொள்கின்றன. அந்த மக்களின் தேவைகளுக்கான நிலையான தீர்வை கொண்டு வருவதற்கு அத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயன்முறைகளுக்கு உதவுவதும் ஆதரிப்பதும் ஐ.நா.வின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் அல்லது அதிகார அமைப்பையும் சார்ந்திருக்காத நடுநிலை வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற இலங்கை உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் சபையின் 75வது கூட்டத் தொடரின் அரச தலைவர்களுக்கான மாநாடு இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் இரவு (22) 9.00 மணிக்கு நியுயோர்க் தலைநகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக ஆரம்பமானது.

“நாம் விரும்பும் எதிர்காலம், எமக்கு தேவையான ஐக்கிய நாடுகள் சபை : பல்தரப்புக்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை மீள் உறுதி செய்வோம்” என்பது மாநாட்டின் கருப்பொருளாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் தலைவர் வோல்கன் போஸ்கிர் ஆகியோரின் உரைகளுடன் மாநாடு ஆரம்பமானது.

பிரேசில் ஜனாதிபதி ஜாயிர் பொல் சொனாரோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் முதலாவது மற்றும் இரண்டாவது உரைகளை நிகழ்த்தினர்.

இலங்கை நேரப்படி நேற்று (23) அதிகாலை 4.45க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாநாட்டில் உரையாற்றினார்.

போதைப்பொருள் தொடர்பான சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை ஆழ்ந்த உறுதியுடன் உள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருளைத் தடுப்பதை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த குற்றவியல் குழுக்களின் அதிகரித்துவரும் நுணுக்கங்கள் குறித்து இலங்கை தீவிர கவனம் செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளது. இது நிறுவப்பட்டதிலிருந்து பாராட்டத்தக்க பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அனுபவித்த இலங்கை, உள்நாட்டு அல்லது சர்வதேச ரீதியில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் மிக வன்மையாக கண்டிக்கிறது” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை மண்ணிலிருந்து பயங்கரவாதம் நீக்கப்பட்ட போதிலும் அதன் இரக்கமற்ற சித்தாந்தத்தை முன்னிறுத்தியும் அதன் ஆதாரமற்ற பொய்கள் மற்றும் பிரச்சாரங்களை பரப்பிக்கொண்டு இந்த பயங்கரவாத அமைப்பின் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயற்படுகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். வன்முறை சித்தாந்தத்தை வெவ்வேறு போர்வைகள் மற்றும் வெளிப்பாடுகளின் கீழ் தொடர்ந்து ஆதரிக்கின்ற மற்றும் பரப்புகின்ற இந்த சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த அரசும் சகித்துக்கொள்ளாது என்று தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குறுகிய அரசியல் தூண்டல்களை கருத்திற்கொள்ளாது பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு உலகளாவிய சமூகம் இலங்கைக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“இந்த ஆண்டின் பொதுச் சபை விவாதத்தின் கருப்பொருள் காலத்திற்கு ஏற்றதாகும். அது COVID-19 இன் பாதிப்புகளைத் தணிப்பதில் தேசிய எல்லைகள் கடந்து ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எதிரொலிக்கிறது. “COVID 19 உலகளாவிய மனிதாபிமான பதிற்குறி திட்டம்” மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ‘COVID-19 பதிற்குறி மற்றும் மீட்பு நிதியத்தை நிறுவுதல் உள்ளிட்ட இந்த சவாலுக்கு முகம்கொடுப்பதற்கு ஐ.நா. எடுத்த முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக தனது உரையின் இறுதியில் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts