தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனும் அந்தஸ்தை TNA இழந்துள்ளது

வடக்கில் இருந்து புதிய தலைவர்களை தமிழ் மக்கள் தெரிவுசெய்துள்ளதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி இல்லை என்பது உறுதியாக இருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் வடக்கு பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அமைச்சர் நேற்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலில் வடக்கு மக்கள் அதிகாரத்தை ஒரு கட்சிக்கு மாத்திரம் வழங்காமல் பிரித்து வழங்கியிருப்பதை காணமுடிகின்றது. இதனால் வடக்கில் அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. வடக்கில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமாகும். தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக தங்களுக்கு மாத்திரம்தான் கதைக்க முடியும் என கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது அவ்வாறு தெரிவிக்க முடியாது.

பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாத்திரம் அதிகாரத்தை வழங்காமல் வேறு கட்சிகளின் தலைவர்களை தெரிவு செய்திருக்கின்றனர். குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பில் பிள்ளையான். அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அங்கஜன் ராமநாதன் இருக்கின்றார்.

அதன் பிரகாரம் தமிழ் மக்கள் பொறுப்புக்களை பிரித்து வழங்கி இருக்கின்றனர்.

அதனால் தமிழ் மக்களின் இந்த மாற்றத்தை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வடக்குக்கும் கொண்டு செல்வோம். அபிவிருத்தி திட்டங்கள் தெற்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொன்றல்ல. குறிப்பாக எனது கல்வி அமைச்சின் பாடசாலை அபிவிருத்தி திட்டங்களை வடக்கு பிரதேசத்துக்கும் கொண்டுசெல்வோம். வடக்கும் எமது நாட்டின் ஒரு தொகுதி. அதனால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தெற்கில் போன்று வடக்கு பிரதேசங்களிலும் மேற்கொள்வோம்.

அதனால் அனைவருடனும் இணைந்து செயற்படவே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்காக அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சுயாதீன ஆணைக்குழுகள் மற்றும் அதற்கு உறுப்பினர்களை நியமிக்கும் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிப்பவர்கள் அரசியல்வாதிகளைவிட அரசியல் செய்பவர்களாகவுள்ளதுடன், அவர்கள் இந்நாட்டுக்கு எதிரான சக்திகளின் கைப்பாவைகளாகவும் செயற்படுவதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகியுள்ளவரையும் காட்டில் உயரிய இடத்தில் அமர்ந்து தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களும் 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை மாற்றியமைப்பதற்கான ஆணையையே கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வஙழக்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

தாம் வாக்களித்து வெற்றிபெற வைத்த ஜனாதிபதியின் ஆட்சியில் மக்கள் திருப்தியில்லாவிட்டால் அடுத்த தேர்தலில் அவரை தோல்வியடைய செய்யும் பலம் மக்களிடம் உள்ளது.

ஆனால், ஜனாதிபதியையும் காட்டில் உயரத்தில் அமர்ந்துக்கொண்டு தீர்மானங்களை எடுக்கும் அரசியலமைப்புப் பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களை நீக்குவதற்கான அதிகாரம் மக்களிடம் இல்லை.

ஆட்சி மாறினாலும், பாராளுமன்றம் மாறினாலும், ஜனாதிபதி மாறினாலும் நாட்டுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து செயற்படும் இவர்கள் மாறுவதில்லை.

இது மக்களை ஏமாற்றும் அல்லது முட்டாள்களாக்கும் பொய்களாகும். 19ஆவது திருத்தச்சட்டம் நாட்டுக்கு சாபக்கேடு என்பதுடன் நாட்டை அராஜக நிலைக்கு தள்ளியள்ளது.

19ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறம் நபர் ஒருவர் இல்லை. இதனால் மக்கள் தமது உயிரை தியாகம் செய்ய வேண்டியே காணப்படுகிறது.

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சைக் கூட வகிக்க முடியாத வகையில் தடைகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

19ஆவது திருத்தச்சட்டத்தில் முதலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், நாட்டுக்குப் பொறுத்தமான அரசியலமைப்பொன்று பின்னர் கொண்டுவரப்படும்.

எம்.ஏ.அமீனுல்லா

Related posts