உலகத் தமிழ் வம்சாவழி மாநாடு டென்மார்க்கில் இருந்தும் சிறப்புரை..!

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐநா சபைக்கு அழைத்து சென்று கல்வியில் புதுமை என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் செய்து அவர்கள் கருத்துகளை ஐ.நாவில் சமர்ப்பிக்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பன்னாட்டு கல்வியாளர்களும் பங்கேற்றனர்.

இரண்டாம் ஆலோசனைக்கூட்டத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் மற்றும் துணைவேந்தர்களுடனும் நடைபெற்றது. மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் கமலஹாசன் மற்றும் பன்னாட்டு கல்வியாளர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நான்காவது இணையவழி ஆலோசனை கூட்டம் 14.8.2020 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் இணைப்புரையாற்றினார்.இந்த கலந்துரையாடல் நிகழ்வில் இலங்கை முன்னாள் இணை அமைச்சர் டாக்டர் வி.ராதாகிருஷ்ணன் எம்.பி., மலேசிய முன்னாள் இணைய அமைச்சர் டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் குறிப்பாக. லண்டன் காலேஜ் ஆஃப் மீடியா இயக்குனர் மைக்கேல் பேசுகிற பொழுது கனடாவில் கல்வித்துறையில் பயன்படுத்துகிற தொழில்நுட்பங்கள் குறித்தும் அதிகமாக புரஜக்டர் பயன்படுத்தி மாணவர்களுக்கு மீடியா துறையில் கல்வி பயிற்றுவிக்கும் முறை குறித்தும், புதிய தொழில்நுட்பத்தை வரவேற்க வேண்டும் ,அதை செயல்படுத்த வேண்டும், என்பது குறித்தும் பேசினார்.

செய்திவாசிப்பாளர் ரஞ்சித் பேசுகிறபொழுது, முன்பு கைபேசியை எடுத்தால் கல்வி கெட்டு விடும் என்பார்கள், இன்று கைபேசி இல்லாமல் கல்வியே இல்லை என்ற நிலைக்கு காலம் மாறிவிட்டது எனவே, இதில் இருக்கும் சாதக பாதகங்களை அறிந்து பாதுகாப்பான சமூக முன்னேற்றத்திற்கான கல்வியை வழங்க வேண்டும் என்று பேசினார். வணக்கம் மலேசியாவின் நிறுவனர் தியாகராசன் பேசுகிற பொழுது, ஊடகத் துறையின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் செய்தியை பார்ப்பவர்களாக மட்டுமே இல்லாமல் செய்தியை வழங்குபவர்களாகவும் மாறி வருகிறார்கள். சமூக ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருவதால் அனைவருமே ஊடகத்துறையில் தங்கள் பங்களிப்பை ஆற்றி வருகிறார். எனவே சிட்டிசன் சேனல் என்கிற பள்ளியிலேயே ஊடகப்பிரிவு பாடத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதன் மூலமாக நேர்மையான உண்மையான பகிர்வுகளை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை பள்ளியிலேயே மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டென்மார்க்கிலிருந்து டியூப் தமிழ் இயக்குனர் துரை பேசும்பொழுது டென்மார்க்கில் டேனிஸ் மொழிக்கு இணையாக தமிழ் மொழியின் பயிற்சி முறையும் இருக்கிறது. இங்கே தமிழ்மொழியின் சிறப்பை பார்த்து உலகநாடுகள் வியக்கின்றனர். இளைஞர்கள் மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிற இணையத்தை, பெற்றோர்களும் ஆசிரியர்களும் முறையான பயிற்சி பெற வேண்டியது மிக அவசியம். தமிழ்மொழி தனிச்சிறப்பு மொழி என்பதை நான் டென்மார்க்கில் வந்துதான் கூடுதலாக தெரிந்து கொண்டேன். நமது தமிழ் முன்னோர்கள் வழியில் நாம் பயணிக்க வேண்டும், உலகத்தை இணையம் ஆளப்போகிறது, அதேபோல் இணையத்தை தமிழ் ஆளப்போகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று பேசினார்.

ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா பேசுகிறபோது ஊடகத்துறை இரண்டாக பிரிக்க வேண்டுமேயானால் கொரானாவிற்கு முன் கொரானாவிற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம், அந்த அளவிற்கு ஊடகத்துறையில் கொவிட்டுக்கு பின் பெரும் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் சினிமாத் துறையிலும், பிரின்ட் மீடியாவிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. விளம்பரங்களை நம்பி இயங்குகிற ஊடகங்கள் விளம்பரம் மிகக் குறைவாக இருப்பதால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பல ஊடக நிறுவனங்கள் இயங்க முடியாமல் நிறுத்தி வருகின்றன. சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் வீட்டில் இருந்துகொண்டே ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப் , போன்ற இணைய செயலிகள் அதிகமாக மக்கள் பயன்படுத்த விரும்புகின்றனர்.

ஊடகத்துறையில் பணிபுரிவதற்கு விஷுவல் கம்யூனிகேஷன் என்ற பாடத்தை மட்டுமே எடுக்கிறார்கள். இன்னும் பல்வேறு பிரிவுகளில் இருக்கிறது. நல்ல பயனுள்ள வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகள் இருக்கின்றன, அதையும் அனைவரும் படித்து பயன் பெற வேண்டும். குறிப்பாக விளம்பரப் பிரிவு, மக்கள் தொடர்பு, ஈவன்ட் மேனேஜ்மென்ட், சோசியல் மீடியா , போன்ற அதிவேகமாக வளர்ந்து வருகிற பொருளாதாரமும், வேலை வாய்ப்பும் அதிகமாக உள்ள துறைகளை படிக்க வேண்டும்.என்று பேசினார் .

நீயா நானா கோபிநாத் கலந்துகொண்டு பேசும்போது, இன்றைக்கு ஊடகத்தில் இருக்கிற போட்டி என்னவென்றால் ஒரு செய்தியை யார் முதலாவதாக கொடுக்கிறார்கள் என்பதும், உண்மை போல் செய்தியை போடுவதும் தான், அதிகமாக இருக்கிறது. செய்தித் துறையில் சுவாரசியத்தை எதிர்பார்க்கிறார்கள். அப்படி சுவாரஸ்யமான செய்திகளை சொன்னால் உண்மை தன்மை இருக்காது, மக்களுக்கு நம்பிக்கையும் ஏற்படாது, எனவே உண்மையான செய்திகளை சுவராசியமாக சொல்லுதல் தான் கலை. அதை வளர்த்தெடுக்க வேண்டும். நாம் சொல்லுகிற செய்தி ஜனநாயக தன்மையாக வேண்டும், நாம் சொல்லுகிற செய்தி மக்களுக்கு சென்று சேர வேண்டும், என்பதே, முதலாவது நோக்கமாகக் கொண்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட செய்திகளை சொல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கான முறையான கல்வியை நம்பகத்தன்மை வளர்க்கிற கல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.

மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ தேவ மணி பேசும்பொழுது, ஏழை எளிய மாணவர்கள் பயன்படுத்தும் அளவிற்கு இன்னும் டிஜிட்டல் சென்றடையவில்லை. இணையத்தை மட்டுமே நம்பி இருக்கிற கல்வியாக இல்லாமல் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கிற கல்வியை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் புதிய மாற்றங்களை நாம் கொண்டு வரவேண்டும். பரிட்சை என்று சொல்லி தொழில்நுட்பத்தை நம்பியே சென்று கொண்டிருக்கிறார்கள். அது ஒரு இயந்திர மயமான வாழ்க்கையை மட்டுமே நமக்குத் தரும் எனவே நல்ல மனிதனாக பண்புள்ள மனிதனாக வளர்த்தெடுப்பதற்கு முறையான கல்வியும், சரியான தீர்வு முறைகளும், இருக்க வேண்டும். கற்றல்-கற்பித்தல் சூழலில் புதிய தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் சென்றடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.

இலங்கையின் முன்னாள் அமைச்சர் வி ராதாகிருஷ்ணன் MP பேசுகிற பொழுது, இலங்கையின் கல்வி முறைகள் குறித்தும் இலங்கையில் பயிற்றுவிக்கும் முறைகள் குறித்தும் ஆசிரியர்கள் பயிற்சி முறைகள் குறித்தும் இலங்கையில் பயிற்றுவிக்கப்படும் ஆன்லைன் ட்ரெய்னிங் முறைகள் குறித்தும் விரிவாக பேசினார். குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள கல்வியை இணையத்தின் வழியாக கொடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதுவே இந்த சூழலில் மிக அவசியம் என்றும் அவர் பேசினார். இலங்கையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகளில் முறையான பயிற்சி அளிக்கக்கூடிய நல்ல ஆசிரியர்களை நியமித்து இந்தப் புதிய சூழலை சமாளிப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களை கையாளுவதற்கான பயிற்சிகளையும் நாங்கள் கொடுத்து வருகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதை நாம் முறையான பயிற்சி எடுத்து பயன்பட வேண்டும் என்று பேசினார். இறுதியாக ஊடக பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் நன்றியுரை கூறினார்.

செல்வக்குமார் – தலைவர் உலக தமிழ் வம்சாவளி அமைப்பு

Related posts