சிறீலங்கா தேர்தல் களம் அதிரடி கேள்வி பதில் அசத்தல்..

சிறீலங்கா தேர்தல் களம் அதிரடி கேள்வி பதில் அசத்தல்..
தாயகத்தில் இருந்து டிவனியா டென்மார்க்கில் இருந்து கி.செ.துரை

01 கேள்வி : நடந்து முடிந்த தேர்தலை வெளி நாட்டில் இருந்து பார்க்கும்போது எப்படியுள்ளது..?
பதில் : சிங்கள மக்கள் ஒரு கட்சியை தேர்ந்துள்ளனர் தமிழ் மக்கள் பல கட்சிகளை தேர்ந்துள்ளனர். பல கட்சி நல்லாட்சியும், ஒரு கட்சி புகழ் கூட்டமைப்பும் தேர்தலில் தோல்வி இதுவே தூரத்து ஓவியமாக உள்ளது.

02. கேள்வி : சிறீலங்காவின் தேர்தல் முறையின் ஜனநாயக சிறப்பு என்ன..?
பதில் : புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசலியில்லை. தேர்தல் மோசடியையும் ஏற்றுக்கொள்ளும் தெய்வீக ஜனநாயகம்.

93. கேள்வி : வெற்றி பெற்ற அனைவரிலும் இருக்கும் பொதுவான பண்பு என்ன..?
பதில் : சொல்லத் தெரியும் ஆனால் செய்யத் தெரியாது.

04. கேள்வி : நம் தலைவர்கள் அனைவரதும் பொதுவான இலட்சிய வெற்றி என்ன..?
பதில் : அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலே போதும் என்பதுதான். அதுதான் அவர்களின் அடுத்த ஐந்தாண்டு திட்டம்.

05. கேள்வி : உண்மையாக தேர்தல் வெற்றி என்பது எதனால் நிருபணமாகிறது..?
பதில் : என்று உலகம் நமது நாட்டை வெற்றி நாடாக போற்றுகிறதோ அன்றுதான்.

06. கேள்வி : அந்த வெற்றிக்கு ஓர் உதாரணம்..?
பதில் : நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் அந்தத் தீவை வெற்றித் தீவாக மாற்றி உலக புகழ் பெற்றிருக்கிறார்.

07. கேள்வி : அப்படி அவர் செய்த புதுமை என்ன..?
பதில் : பெரும்பான்மை மக்களின் பக்கம் நிற்காமல் கொல்லப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்தால் 100 வருடங்களில் இல்லாத புகழ் தலைவராகியிருக்கிறார்.

08. கேள்வி : அப்படி நிற்க சிங்கள தலைவர்களால் முடியுமா..?
பதில் : முடியாது சிங்கள மக்கள் அவர்களுக்கு துரோகிப்பட்டம் கட்டிவிடுவார்கள்.

09. கேள்வி : அப்படியானால் தமிழ் தலைவர்களால் முடியுமா..?
பதில் : அவர்களுக்கு இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் துரோகி பட்டம் போஸ்டில் வரும்.

10. கேள்வி : உண்மையான தேர்தலின் வெற்றிக்கு அடையாளம் என்ன..?
பதில் : உலக அரங்கில் இலங்கைக்கு பெரு மதிப்பை தேடித்தர வேண்டும். ஜெசிண்டா ஆர்டன் போல துணிச்சல் வேண்டும்.

11. கேள்வி : அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
பதில் : துணிந்து போரை வென்ற வீரர் என்பது உண்மையானால் தமிழ் மக்கள் பிரச்சனைகளையும் துணிந்து தீர்க்க வேண்டும். தமிழர் பிரச்சனையை தீர்க்க துணிச்சல் வராவிட்டால் போரில் வென்றது உண்மையாக இருக்காது.

12. கேள்வி : 1977 ம் ஆண்டு ஐ.தே.க தலைவர் ஜே.ஆர் ஜெயவர்தனா பெற்ற வெற்றி போல ஒரு வெற்றியை மகிந்தவும் பெற்றுள்ளார் என்கிறார்களே.. ஜே.ஆரின் வெற்றி என்றால் என்ன–?
பதில் : ஆட்சி என்ற முழுத் தேரையும் லைசென்ஸ் இல்லாத ஒருவர் கையில் கொடுத்ததால் அவர் எல்லோரையும் மாவட்ட மந்திரியாக்கி, இனப்போரை ஆரம்பித்து இந்திய படையை வர செய்து நாட்டையே கவிழ்த்துவிட்டார். நாட்டை இந்த நிலைக்கு மாட்டியதுதான் அவர் பெற்ற வெற்றி..!

13. கேள்வி : அப்படியானால் மகிந்த பெற்றுள்ள வெற்றி ..?
பதில் : காலம் மீண்டும் திரும்பி அதே சவாலை விட்டிருக்கிறது. ஜே.ஆர் பாணியில் சென்றால் மொட்டும் கருகிவிடும். சரியான தடத்தில் இனியும் இறக்காவிட்டால் மகிந்த குடும்பத்திற்கும் இன்று ஜே.ஆர் குடும்ப வாரீசு ரணிலுக்கு நடந்ததுதான் நடக்கும்.

14. கேள்வி : மகிந்த வெற்றி மக்களுக்கு மகிழ்ச்சி தருமா..?
பதில் : அவருடைய போரின் வெற்றி யாருக்காவது மகிழ்ச்சி தந்துள்ளதா…? அந்த கண்ணீரை பன்னீராக மாற்ற அவருக்கு தெரியவில்லை. மகிந்த குடும்பத்திற்கு மட்டுமே இப்போது வெற்றிக்கிண்ணம் கிடைத்தது அது அவர்களுக்கு மகிழ்ச்சி ஆனால் மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் எப்படி மகிழ்வது..?

15. கேள்வி : அப்படியானால் மகிந்த இனி என்ன செய்யப்போகிறார்..?
பதில் : விஜய் பட டயலாக்தான் ” நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..!”

15. கேள்வி : மகிந்த முன் இருக்கும் சவால் என்ன..?
பதில் : எப்போதுமே சிறிய வெற்றியை விட பெரிய வெற்றி ஆபத்தானது. பொறாமையால் சிங்கள தலைமைகள் மகிந்த குடும்பத்திற்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. சிங்கள வரலாறு முழுவதும் இதுதான் நடந்துள்ளது. இனி அவருக்கு தமிழர் பிரச்சனையல்ல சிங்கள தலைவர்களே பிரச்சனையாக மாறுவர்.

16. கேள்வி : இனி தமிழ் தலைவர்களுக்கு வருவோம்.. தமிழ் தலைவர்களின் வெற்றிக்கு தடை என்ன..?
பதில் : அவர்களுக்கு ஈழம் அல்ல நோய் ” ஈகோ ” தான் நோய். ஈகோ நோய் கட்டி பற்றி இப்போது மன நோயாக மாறிவிட்டது.

17. கேள்வி : உதாரணம் தர முடியுமா..?
பதில் : தன் மாணவனான சுமந்திரனையே ஏற்காத ஆசிரியர் சி.வி.விக்னேஸ்வரன்.. அதுபோல தன் ஆசிரியரையே மதிக்க தெரியாத மாணவன் சுமந்திரன். ஈகோ முற்றிய இருவர்.

18. கேள்வி : அப்படியானால் சைக்கிளாவது உருப்படுமா..?
பதில் : சைக்கிளில் ஒருவர் மட்டுமே ஓடலாம்.. அங்கு பலருக்கு இடமில்லை.. அது பழைய பொன்னம்பலத்தின் றலி சைக்கிள். மக்களுக்கான சைக்கிள் அல்ல.

19. கேள்வி : வீட்டு சின்னத்தின் எதிர்காலம் என்ன..?
பதில் : அது தந்தை செல்வாவின் கால குச்சு வீடு, இப்ப அதற்குள் மாடு கூட படுக்க இயலாது என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது. டாய்லட் இல்லாத வீடும், டயர் மாற்ற முடியாத சைக்கிளும் பாவனைக்கு உதவாது என்பதை மக்கள் புரிந்துவிட்டார்கள்.

21. கேள்வி : அப்படியானால் மீன்.. வீணை.. மொட்டு..?
பதில் : டக்ளஸ் என்ற வித்துவான் வீணையை வைத்திருக்கிறார், மக்கள் மகிழ இதுவரை ஒரு வீணைக்கச்சேரி வைக்கவில்லை. மீனுக்கு வீணை வாசிக்க தெரியாது.. இன்றுள்ள நிலையில் அது வாசுதேவ நாணயக்கராவின் தூண்டிலில் மாட்டாது இருந்தலே பெரிய விடயம். மொட்டு மலர சூரியன் வேண்டும். அதை மலர்விக்கும் தமிழர் கூட்டணி உதய சூரியன் என்றோ அஸ்த்தமித்துவிட்டது. இதுதான் யதார்த்தம்.

22. கேள்வி : எல்லாம் சேறாக இருக்கிறதே விடிவு வருமா..?
பதில் : சேற்றில்தான் செந்தாமரை மலரும். இலங்கையின் முதல் தலைமுறை தலைவர்களுக்கான கடைசி வாய்ப்பு இதுதான். துணிந்து விடிவை தராவிட்டால் அடுத்த தேர்தலுக்குள் அவர்களுடைய முதுமையே அவர்களுக்கான விடிவையல்ல முடிவை கொடுத்துவிடும்.

வணக்கம்.

Related posts