உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது

உலகையே உலுக்கும் கொரோனா பாலிவுட்டில் படமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிர்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து உலகும்ழுவதும் கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளிடையே பகிரப்பட்ட உளவுத்துறை அறிக்கையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்து தோன்ற வில்லை அங்குள்ள சந்தையில் இருந்தே தோன்றி உள்ளது என ஒரு விவாதம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் நாட்டை உலுக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அதனை பாலிவுட்டில் படமாக எடுத்து விடுவார்கள். கார்கில் போர், நிர்பயா கொலை, ஆசிட் வீசப்பட்ட பெண், மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல் என பல படங்கள் வெளிவந்திருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றியும் படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பிரத்யூஸ் உபாத்யாய் இதனை இயக்கி, தயாரிக்க இருப்பதாகவும், இதில் நிகிதா ராவல் கொரோனா மர்மம் பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்கும் பத்திரிகையாளராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பிரத்யூஸ் உபாத்யாய் கூறுகையில்,

கொரோன வைரஸ் பற்றிய படம் எடுக்க உள்ளோம். இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் வந்தது எப்படி, அதன் தடுப்பு பணிகள், எப்படி, பாதிப்பு எப்படி, வைரஸ் எங்கே உருவானது, யாரால் பரப்பபட்டது என்பது பற்றி படத்தில் குறிப்பிட உள்ளோம். எனது குழுவினரால் திரைக்கதை மெருகேற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு குறுகியகால தயாரிப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts