இலங்கை ஊடகங்களில் இன்று கண்ட செய்திகள் 25.04.2020

இந்தியாவின் மும்பாய் நகரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 163 பேரை அழைத்துக் கொண்டு விசேட விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
UL 144 எனும் இலக்கம் கொண்ட விமானத்தின் மூலம் இன்று (25) பிற்பகல் 2.35 மணிக்கு குறித்த மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு திரும்ப முடியாமல் இருந்த குறித்த மாணவர்களுடன், வியாபாரிகளைக் கொண்ட குழுவினரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

—-

வாரியபொல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (20) வாரியபொல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களுடன் குறித்த தேரரும் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து அமைதியற்ற வகையில் நடந்து, பொலிஸ் பரிசோதகர் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த் தேரர் இன்று (25) காலை 8.15 மணியளவில் வாரியபொல பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரான தேரர் இன்று (25) வாரியபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை ரூ. 50 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் 9.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடையில், வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு முன்னிலையாகுமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபரின் சகோதரரான, மதுபான விற்பனையாளர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாரியபொலவில் உள்ள பொத்துவெல பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட குறித்த வர்த்தகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இரவு, பொலிஸார் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டி, அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த மதுபான வர்த்தகர் நேற்றுமுன்தினம் (21) பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார்.

Related posts