ஊரடங்கை மதிக்காத கோமாளிகளால்..சல்மான் கான்

அரசாங்கம் விதித்த விதிமுறைகளை மதிக்காமல், ஊரடங்கின் போது வெளியே தெரிந்து, பலநூறு உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களை நடிகர் சல்மான் கான் கோமாளி என்று அழைத்துள்ளார்.
கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்தே நடிகர் சல்மான் கான் உட்பட பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.
தற்போது சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடக் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் இந்தி பதிப்பின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கும் சல்மான், இப்போது அனைவருமே வீட்டில் இருக்கும் சூழலை, உலகத்தின் பிக் பாஸ் என்று அழைத்துள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள சல்மான், “வெளியே செல்லாதீர்கள், கூட்டம் கூட்டாதீர்கள். குடும்பத்துடன் இருங்கள். நமாஸ், பூஜை என எதுவாக இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே செய்யுங்கள் என் அரசாங்கம் கூறியுள்ளது. உங்கள் குடும்பத்தைச் சாகடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் வெளியே வாருங்கள்.
வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டுமென்றால் உரிய பாதுகாப்புடன் வாருங்கள். கரோனா தொற்று இருக்கும் நபரின் வலியைப் புரிந்து கொள்ளாதவர்கள் மனிதத்துக்கு எதிரானவர்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், இந்த தொற்றைக் கட்டுப்படுத்த பல மணிநேரம் உழைக்கின்றனர். அவர்கள் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து வீட்டிலேயே இருங்கள். நீங்கள் வெளியே நண்பர்களோடு செல்லாமல் இருந்தால் போலீஸ் ஏன் உங்களை அடிக்க வேண்டும்? அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது என நினைக்கிறீர்களா?
உங்கள் உயிரைக் காப்பாற்ற உழைக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர்கள் மீது கல்லெடுத்து அடிக்கிறீர்கள். கரோனா தொற்று இருப்பவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடுகின்றனர். எங்கு ஓடுகிறீர்கள்? வாழ்வை நோக்கியா, சாவை நோக்கியா?
சீனாவில் ஆரம்பித்த கிருமி சீனாவில் இப்போது இல்லை. ஆனால் சில கோமாளிகளால் ஒட்டுமொத்த இந்தியாவும் நீண்ட காலம் வீட்டிலேயே உட்கார வேண்டியிருக்கிறது. இதற்கு முன் வீட்டை விட்டு வெளியே வராதவர்கள் கூட, இப்போது வர வேண்டாம் என்று சொல்லப்பட்டிருப்பதால் வெளியே வருகிறார்கள். நீங்கள் அனைவரது உயிருக்கும் ஆபத்தைத் தேடித் தருகிறீர்கள்.
மேற்கொண்டு இந்த நோய்த்தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். ராணுவம் வந்தால்தான் மக்களைத் திருத்த முடியும் என்ற நிலை வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்” என்று சல்மான் கான் கூறியுள்ளார்.

Related posts