மரணப்படுக்கையில் கிடக்கும் இந்திய திரையரங்குகள் !

தங்களுடைய திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்புவது என்று ராம் சினிமாஸ் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் கல்வி நிலையங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, கரோனா அச்சம் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியவில்லை.

இந்திய மொழிகளில் கோடை விடுமுறை வெளியீட்டுக்காகத் திட்டமிடப்பட்ட படங்கள் யாவுமே தள்ளிவைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவுள்ளோம் என்று பிவிஆர் நிர்வாகம் முன்கூட்டியே அறிவித்தது.

தற்போது திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கமும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “கரோனா பிரச்சினை முடிந்த பிறகு எங்கள் திரையரங்கில் சமூக விலகலைக் கடைப்பிடிக்க முயல்வோம். எங்கள் அரங்கில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 767. அதில் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்புவோம். இடைவேளையில் ரசிகர்களின் இருக்கைக்கு வந்தே நாங்கள் சாப்பிட ஆர்டர் எடுத்துக் கொள்வோம். உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்”.
இவ்வாறு ராம் சினிமாஸ் திரையரங்கம் தெரிவித்துள்ளது.

Related posts