விருந்தில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 26 ஆயிரம் பேர் தனிமை

துபாயிலிந்து திரும்பி வந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் அளித்த விருந்தில் பங்கேற்ற 1,200 பேர் உள்ளிட்ட 26 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா நகரில் நடந்துள்ளது.

இதுகுறித்து மொரேனா மாவட்ட துணை ஆட்சியர் ஆர்.எஸ்.பக்னா நிருபர்களிடம் கூறியதாவது:’மொரேனா நகரைச் சேர்ந்த நபர் துபாயில் ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவரின் தாய் இறந்ததையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்பினார்.

அவரின் தாய் இறந்தபின் 13-வது நாளில் அவர் சார்ந்திருக்கும் மத வழக்கத்தின்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடந்த மாதம் 20-ம் தேதி விருந்து வைத்துள்ளார்.

இந்த விருந்தில் 2 ஆயிரத்தக்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி அந்த நபருக்கும், அவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

அந்த நபருக்கும், அவரின் மனைவிக்கும் கரோனா வைரஸ் பாதித்ததற்கான அறிகுறிகள் இருந்ததால் அவரின் கணவரிடம் சமீபத்தில் வெளிநாடு சென்றீர்களா என மாவட்ட அரசு தலைமை மருத்துவர் ஆர்.சி பந்தில் கேட்டுள்ளார்.

ஆனால், தான் துபாயிலிருந்து திரும்பியதை அந்த நபர் மறுத்துவிட்டார்.இந்நிலையில் வழக்கமான சிகிச்சையளித்த நிலையில் இருவரின் நிலைமையும் மிகவும் மோசமடைந்ததால் தனி வார்டுக்கு மாற்றப்பட்டனர். அப்போது மருத்துவர்கள் அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளால் விசாரித்தபோது அந்த நபர் தான் துபாயிலிருந்து கடந்த மார்ச் 17-ம்தேதி வந்ததாகத் தெரிவித்தார்.

அதன்பின் கடந்த 3-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 10 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 10 பேரும் அந்த துபாய் நபருடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர்கள்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு நிலைமையைக் கூறி அவசரகால நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அந்த நபர் வைத்த விருந்தில் பங்கேற்றவர்களின் பட்டியல் முழுமையாக எடுக்கப்பட்டு 1,200 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் 47-வது வார்டில் இருந்ததால் அந்த வார்டில் இருந்த மக்கள் அனைவருடனும் இந்த 1200 பேரும் பழகியதையும் பேசியதையும் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த வார்டில் இருந்த 26 ஆயிரம் பேரையும் வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு, அந்த வார்டு சீல் வைக்கப்பட்டது.மேலும் துபாய் சென்று வந்த நபர் வைத்த விருந்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்”.
இவ்வாறு ஆர்.எஸ்.பக்னா தெரிவித்தார்.

Related posts