4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் நடக்காமல் இருக்க உறுதி ஏற்போம். டெல்லி போலீஸார், நீதிமன்றங்கள், மாநிலங்கள், மத்திய அரசு ஆகியவை சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அகற்றி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இவர்களின் அனைத்துச் சட்ட வாய்ப்புகளும் உதவவில்லை. 3 முறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அதில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிய 4 பேரும், 4-வது டெத் வாரண்ட்டில் மரணத்தில் பிடியில் சிக்கினார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் ஒரே நேரத்தில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர்.

ஆனால், முதல் டெத் வாரண்ட் ஜனவரி 22-ம் தேதி விதிக்கப்பட்டதில் இருந்தே அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு குற்றவாளிகள் நான்கு பேரும் மிகவும் புத்திசாலித்தனமாக ஒருவர் மாற்றி ஒருவர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு, சீராய்வு மனு, மறு ஆய்வு மனு ஆகியவற்றைத் தாக்கல் செய்து தண்டனையைத் தள்ளிப் போட்டனர். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் சட்டத்தோடு விளையாடுவது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ” 7 ஆண்டுகளுக்குப் பின் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா வழக்கும், நிர்பயாவும் பாதிக்கப்படக்கூடாது என்று உறுதி ஏற்க வேண்டிய நேரம்.

போலீஸார், நீதிமன்றங்கள், மாநில அரசுகள், மத்திய அரசு ஒட்டுமொத்தமாக இணைந்து செயலாற்றி, எந்த மகளுக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

டெல்லி அரசு சார்பில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

”எந்தக் குற்றவாளிக்கு எதிராகவும் ஒரு பெண் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றால் எவ்வாறு நடத்தப்படுகிறார், எவ்வாறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தவிர்க்கப்படுகிறது, குற்றம் இழைத்தவர் போலீஸாருக்கு அழுத்தம் தந்து புகார் கொடுத்தவர்களைத் துன்புறுத்தும் பல்வேறு செயல்களை நாம் பார்த்திருக்கிறோம்.

இதுபோன்ற நிர்வாக முறை மாற வேண்டும். போலீஸ் விசாரணைகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்பட வேண்டும். நீதிமன்ற விசாரணை முறையிலும் மாற்றம் வருவது அவசியம். பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெறுவதற்காக 7 ஆண்டுகள் வரை காத்திருப்பது அவசியமற்றது. அவர்களுக்கு அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் நீதி வழங்கப்பட வேண்டும்.

நீதித்துறை மற்றும் போலீஸ் குறித்து சீர்திருத்தம் கொண்டு வர டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், சமூகத்தின் மற்ற அமைப்புகளை வலுப்படுத்தத் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

தலைநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளோம். சாலை சந்திப்புகளில் விளக்குகள் அமைக்கப்பட்டு இருளான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
பெண்களின் பாதுகாப்பு, கவனம் ஆகியவற்றில் அதிகமான அக்கறை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நம் தேசத்தில் நடக்காமல் தடுக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்”.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

Related posts