இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து கமல்ஹாசன் வழக்கு

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் அவசர முறையீடு செய்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இயக்குநர் ஷங்கர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் கதாநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு ஆஜரானார்.

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. அவரது வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை கூறினேன். இனி இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் அவசர முறையீடு செய்துள்ளார்.

அதில் 3 பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு தன்னிடம் வற்புறுத்துகிறது என அதில் தெரிவித்து உள்ளார்.

வழக்கை அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related posts