உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 6

கூப்பிடுவோரின் கண்களைத் திறந்தருளும்
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள். மத்தேயு 20:34.

கண்களைத் திறக்க வேண்டும் இது எத்தனை உருக்கமான ஜெபம். இந்த சம்பவத்தை விளங்கிக்கொள்ள கீழ்வரும் பகுதியை வாசிப்போம். அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள். அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு, ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ, ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள். இயேசு நின்று, அவர் களைத் தம்மிடத்தில் அழைத்து, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக் கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள், ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்றார்கள். இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார், உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள். மத்.20:29-34.

ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் சிலதடைகள் இருப்பதுபோல அவர்கள் கூப்பிட்ட குரலுக்கும் சிலர் தடைகளைக் கொண்டு வந்தனர். கூப்பிடாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். ஆனால் அவர்களின் சத்தம் இயேசுவை நிற்க வைத்தது. மனதுருகச் செய்தது. அவர்களை அன்போடு தம்மிடத்தில் அழைத்து மனதுருகி கரம் நீட்டி அவர்களின் கண்களைத்தொட்டார். உடனே அவர்கள் பார்வையடைந்தார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் சரீர கண்களும் உண்டு. ஆவிக்குரிய (தேவனோடு வாழும் வாழ்க்கைக்கான) கண்களும் உண்டு. தேவன் கண்களைத் திறக்கிறவர். உங்களைத் திறக்கிறவர். செவிகளையும், வாய்களையும்கூட திறக்கிறவர். தேவன் தாம்படைத்த மக்களின் கண்களைத் திறக்கும்போது, மக்கள் தேவனுக்குரிய காரிங்களைக் காணமுடியும். பிரட்சனைகளையும், அதற்குரிய தீர்வுகளையும் காண முடியும். அமைதியான ஆசீர்வாதமான வாழ்க்கைக்கான வழியைக் காணமுடியும். ஏன் கண்கள் திறக்கப்பட வேண்டும்?

வேதத்தில் உள்ள அதிசயங்களைக் காணும்படியாக:

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119:18. கண்களத் திறந்தருளும் என்றால், என்கண்களுக்கு வெளிப்படும் என்று அர்த்தமாம். அதாவது இந்த வேதத்தில் உள்ள அதிசயங்களை, வழிநடத்தலை, பாதுகாப்பை, ஆசீர்வாத்தை, அற்புதங்களைக் காணவிரும்பினால் நமது கண்கள் திறக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இந்த உண்மையை அறிய 119ம் சங்கீதத்தை வாசித்துப்பார்க்கவும். பொன் வெள்ளியைப் பார்க்கிலும் கர்த்தர் விளம்பின வேதமே மேலானது. விலையேறப்பெற்றுது. அதனுடைய இரகசியங்களை அறிய நமது கண்கள் திறக்கப்பட வேண்டும்.

நம்முடைய வழிகளை அறியும்படியாக:

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக் கச்சைகளை உண்டு பண்ணினார்கள். ஆதியாகமம் 3:7. ஆதாம் ஏவாளின் கண்கள் திறக்கப்பட்டபோது, பாவத்தினால் வந்த விளைவைப் பார்த்தார்கள். தங்களின் பரிதாபமான நிலையைப் பார்த்தார்கள். தேவனின் மகிமை தங்களை விட்டு எடுபட்டுவிட்டது என்பதைப் பார்த்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தாங்கள் நிர்வாணிகளாக இருப்பதை உணர்ந்தார்கள். பாவமானது தேவனுடைய மகிமையை நம்மில் இருந்து உரித்து நிர்வானிகளாக்குகிறது. பாவத்தோடு மக்கள் வாழும் வழிகளை விட்டு, தேவனோடு வாழும் வழியை அறியும்படியாக எமது கண்கள் திறக்கப்படவேண்டும்.

தேவைகளுக்கு தீர்வு காணும்படியாக:

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். ஆதியாகமம் 21:19. (சம்பவத்தை விளங்கிக்கொள்ள அதி.21:1-20 வரை வாசிக்கவும்). வனாந்தரத்திலே தன் குழந்தை யோடு நடந்து சென்ற ஆகார் சத்தமிட்டு அழுதாள். பிள்ளை தாகத்தால் தவித்தது. தண்ணீர் இல்லை. யாரும் உதவி செய்யமுடியாத வனாந்தரமான சூழநிலை. தேவன் அவளின் கண்களைத் திறந்தபோது அருகில் இருந்த துரவைக் கண்டாள். நீருற்றைக் கண்டாள். பிள்ளையின் தாகத்தைத் தீர்த்தாள். தேவனால்; இன்று உங்களுடைய கண்கள் திறக்கப்படுமானால் கர்த்தர் உங்களுக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற நன்மைகளை, ஆசீர்வாதங்களை, நீருறறுக்களை நிச்சயமாக உங்கள் கண்கள் காணும். அன்று ஆகாரின் கூப்பிடுதலைகேட்ட தேவன் இன்று நமது கூக்குரலைக் கேட்டு எமக்கு உதவி செய்ய ஆயத்தமாக இருக்கிறார்.

இயேசுவை காணும்படியாக:

அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். லூக்கா 24:31. (வசனம் 24-31 வரைவாசிக்கவும்). இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு இரண்டு சீடர்கள் துக்கத்தோடு எம்மாவூருக்குப் போனார்கள். இயேசு அவர்களோடு வந்து வேதத்தில் தன்னைப்பற்றி சொல்லப்பட்டவற்றை விளக்கிக்காட்டியும் அவர்கள் அவரை அறியவில்லை. அவரை அந்நியராகவே எண்ணினார்கள். அவர் அவர் களுடைய வீட்டிற்கு சென்றார். அப்பத்தைப்பிட்டு அவர்களுக்கு கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு இயேசுவின் கரங்களில் இருந்த காயத்தைக் கண்டார்கள். காயப்பட்ட கரத்தில் இருந்த அப்பத்தைக் கண்டபோது தங்களுக்கா பிட்கப்பட்ட ஜீவ அப்பமான இயேசு தங்கள் அருகில் இருக்கிறதை அறிந்தார்கள்.

தேவனுக்குப் பிரியமான மக்களே, இன்று உங்களுடைய கண்கள் திறக்கட்டும். உங்கள் அருகில் இருக்கும் இயேசுவை உங்கள் கண்கள் காணட்டும். கிறிஸ்துவை அறியும்படியாக உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்போது உங்கள் அறிவின் கண்கள் திறக்கப்படட்டும். அவரை அறிய முற்படுவீர்கள். அவரை அறிய விரும்பி என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஒப்புக்கொடுப்போம்.

அன்பின் ஆண்டவரே, இன்று நீர் எனக்கு மானிடர்களின் கண்கள் திறப்பதனால் வரும் நன்மைகள் பற்றியறிய உதவியதற்காக நன்றி அப்பா. நீர் எனது கண்களைத் திறந்து, நானும் உம்மை கண்டு, உம்மை அறிகிற அறிவில் வளர உதவி செய்யும் அப்பா. கண் திறக்கப்பட்டவனாக உம்மை அறிந்து, எப்போதும் உம்முடன் வாழ என்னை ஒப்புக்கொடுக்கிறேன். காத்துக்கொண்டு வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts