இன்று இலங்கையில் வெளியான செய்திகளின் தொகுப்பு 06.02.2020

சபாநாயகர் கரு ஜயசூரிய இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷேங் சியுவான் (Cheng Xueyuan) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (05) பிற்பகல் சந்தித்தார்.

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிலைமைகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம், அதிகாரிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து சீன தூதுவர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

சீனா முகங்கொடுத்திருக்கும் சவாலை சமாளிக்க இந்நேரத்தில் பாராளுமன்றம் சீனாவுடன் உறுதுணையாக நிற்கும் என்ற உறுதிமொழியையும் சபாநாயகர் இங்கு வழங்கினார்.

——

ட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை விடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குமே தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொலனறுவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அனைவரும் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றியே அதிகமாக பேசுகின்றனர். அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதல்கள் அல்ல நாட்டின் பிரச்சினை. மக்களின் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளே நாட்டின் பிரச்சினையாகும். அவற்றுக்கே நாம் முக்கியத்துவமளிக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்திருந்தோம். பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரமே இந்த ஆதரவை வழங்கினோம். அந்த உடன்படிக்கையின் பிரகாரமே எதிர்கால நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என்றார்.

—–

முந்தைய அரசாங்கத்தின் போது கையெழுத்திடப்பட்ட சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு

கடந்த அரசாங்கம் கையெழுத்திட்ட, சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் அரச வைத்திய சங்க அதிகாரிகள் உள்ளிட்ட 8 தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றையதினம் (06) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விஜித் மலல்கோடா, எல்.டி.பி. தெஹிதெனிய, பிரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி இவ்விடயத்தை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

இம்மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

——

ஊழல் தடுப்புப் படையணி எனும் அமைப்பின் செயல்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார, இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கலக சம்பவம் தொடர்பாக நாமல் குமார கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபரை இன்று (06) ஹெட்டிபோல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 09 மாதங்களுக்கும் மேலாக தீவிரவாத தடுப்புப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts