பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது ஏன்?

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் ‘பச்சை விளக்கு’. பதீசா, தாரா, ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

“இந்த பச்சை விளக்கு படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம். படத்தில் கமர்சியலும் இருக்கிறது. இன்று நிறையபேர் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும். நிதானமாக சென்றால் நீண்ட நாள் வாழலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார், டாக்டர் மாறன்.

பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன். வித்தியாசமாக சொல்லிக் கொடுப்பார். அவரை நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. கண்ணாடியை மாட்டி அவரை ஹீரோவாக்கினேன். அவர் வாழ்க்கை மாறியது. பாக்யராஜை ஹீரோவாக்கிய போது சிலர் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று கேட்டார்கள். என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன். எனது கண்களுக்கு பாக்யராஜ் வாத்தியாராகவே தெரிகிறார் என்று சொன்னேன். அதன் பிறகு அவர் வளர்ந்தது வேறு. நான் விதை போட்டேன். அவ்வளவுதான். ஆனால், விதை போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதே போல, டாக்டர் மாறன் ஹீரோவாக வேண்டும் என்று துணிந்து நடித்திருக்கிறார். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன்.

பச்சை விளக்கு படத்தில் புத்திசாலித்தனமாக காதலை சொல்லி, விபத்து குறித்தும் சொல்லியிருக்கிறார். இளையராஜாவிடம் எனக்கு பிணக்கு ஏற்பட்டபோது நான் இந்தியாவில் இருக்கின்ற ஆர்.டி.பர்மன் உள்பட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வேலை செய்திருக்கிறேன். பிறகு இளையராஜாவிடம் வருவேன். இளையராஜாவுக்கும், எனக்கும் சில சமயம் ஆகாமல் இருக்கும். இருந்தாலும் இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா ஒருவர் மட்டுமே”. இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

விழாவில் மொரீசியஸ் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, டைக்ரடர் பாக்யராஜ், இசையமைப்பாளர் தேவேந்திரன் உள்பட பலர் பேசினர்.

Related posts