நெருப்பு சூரிய கிரகணமும் இல. கணேசனின் நெருப்பு வேண்டுதலும்.. இந்தியா ருடே..!

இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது. அவர்கள் இலங்கைக்கு திரும்பி தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக வெற்றிப்பெற்றால் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி காலத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் நள்ளிரவில் அவசர சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அது தான் ஜனநாயகப் படுகொலை. அதை செய்யாமல் வெளிப்படையாக தெரிவித்து நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அந்த விவாதத்தில் அனைத்துக்கட்சிகளை பேச அனுமதித்து சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது சரியல்ல. குடியுரிமை சட்டம் குறித்து பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை போராட்டத்துக்கு எதிர்கட்சிகள் தூண்டுகின்றன.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக சட்டத்தில் எதும் சொல்லப்படவில்லை என்கின்றனர். இலங்கை தமிழர்களை பொருத்தவரை குடியுரிமை கேட்டால் வழங்கலாம். ஆனால் அவர்கள் குடியுரிமை கேட்கக்கூடாது. இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு திரும்பி தங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

இலங்கை தமிழர்கள் தலைவர்கள் பலர் என்னை சந்தித்துள்ளனர். அவர்கள் யாரும் தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. இலங்கைக்கு திரும்பி செல்ல தயாராக உள்ளோம். இலங்கை செல்வதற்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தால் போதும் என்றே அவர்கள் கேட்கின்றனர். இது தொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளேன்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் பேரணி நடத்தியுள்ளது. இதனால் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்காளத்துக்கு மம்தா அழைத்துள்ளார். இந்த அளவுக்கு தான் மு.க.ஸ்டாலின் புகழ் பெற முடியும்.
அடுத்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி வைதிருப்பதால் இப்போது இருக்கும் எம்எல்ஏக்களை விட குறைந்த எம்எல்ஏக்களேயே திமுக பெறும்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை கட்சியினர் ஆதரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காக உண்மையில் பாடுபடுவோரை தேர்வு செய்ய வேண்டும்.

ஜார்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறவில்லை. இருப்பினும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

பேட்டியின் போது பாஜக மாநில செயலர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட செயலர் மகா சுசீந்திரன் உடனிருந்தனர்.

——-

உதகையில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெளிவாகத் தெரிந்தது. மக்கள் கிரகணத்தை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று (டிச.26) காலை 8 மணியளவில் தொடங்கியது. உதகையில் இந்த கிரகணம் 94 சதவீதம் தெரியும் என அறிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் ரேடியோ வானியியல் ஆய்வு மையம் சார்பில் முத்தோரையில் உள்ள ஆய்வு மையம் மற்றும் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 8 மணியளவில் தொடங்கிய கிரகணம், காலை 9.26 மணிக்கு முழு நெருப்பு வளையம் தெரிந்தது. மொத்தம் 3 நிமிடங்கள் 7 நொடிகள் இந்த முழு நெருப்பு வளையம் தென்பட்டது. சூரிய கிரகணத்தைக் காண இந்தியாவின் பல இடங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் ரேடியோ வானியல் மையத்துக்கு வந்திருந்தனர்.

வானியல் ஆய்வு மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மும்பையில் உள்ள தேசிய வானியியல் மையம் சார்பில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சூரிய கிரகணத்தைக் காண வானியியல் ஆய்வு மையம் சார்பில் கண்ணாடிகள், தொலைநோக்கிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தெளிவாக தெரிந்தது
நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று கடும் மேகமூட்டமான காலநிலையாக இருந்தது. மேலும், லேசான சாரல் மழை பெய்து வந்தது. இதனால், இன்று நிகழும் சூரய கிரகணத்தைப் பார்க்க முடியுமா? என சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை அதிர்ஷ்டவசமாக மேகமூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தது. இதனால், நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெளிவாகத் தெரிந்தது. பொதுமக்கள் சூரிய கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்.

உதகை முத்தோரை ரேடியோ வானியல் ஆய்வு மைய பொறுப்பாளர் திவ்யா ஓபராய் கூறும் போது, “சூரியன் மற்றும் பூமி இடையே நிலவு வருவதால் சூரிய கிரணம் ஏற்படுகிறது. சந்திரனை விட சூரியன் 400 மடங்கு பெரியது, ஆனால் ஒரே அளவு போல் கண்களுக்குத் தெரியக் காரணம் சந்திரன் 400 மடங்கு நெருக்கமாக வருகிறது என்பதால்.

உதகையில் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாகத் தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உதகையில் 94 சதவீதம் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் 2020-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி தோன்றும். தமிழகத்தில் 2031-ம் ஆண்டு மே 21-ம் தேதி தென்படும். வானியல் ஆய்வு மையம் சார்பில் தொலைநோக்கிகள் மற்றும் புரொஜெக்டர் மூலம் திரையில் சூரிய கிரகணக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன” என்றார்.

தென்னாப்பிரிக்கா நாட்டில் வானியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் நீரஜ்மோகன் சூரிய கிரணத்தைக் காண உதகை வந்திருந்தார்.

அவர் கூறும் போது, “சூரிய கிரணத்தின்போது சாப்பிட கூடாது, குளிக்க வேண்டும் என்பதெல்லாம் மூட நம்பிக்கைகைகள். கிரகணம் போன்ற அறிவியல் நிகழ்வுகளை எல்லோரும் வெளியில் சென்று பார்க்க வேண்டும். கிரகணத்தின்போது சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம். சந்திர கிரகணத்தின்போது நேரடியாகக் கண்ணால் பார்க்கலாம். சூரிய கிரகணத்தின்போது நேரடியாகப் பார்க்கக் கூடாது. நேரடியாகப் பார்த்தால் கண்கள் பாதிக்கும். இதற்காக சிறப்புக் கண்ணாடிகள் உள்ளன. அதன் மூலம் பார்க்க வேண்டும். தொலைநோக்கி மூலம் சூரியனின் பிரதிபலிப்பைத் திரையில் காணலாம்” என்றார்.

Related posts