இன்றைய நாளில் முக்கியம் பெறும் அன்றாட இந்திய செய்திகள் 20.12.2019 வெள்ளி


திருமாவளவன், சித்தார்த், டிம்.கிருஷ்ணா உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திருமாவளவன், சித்தார்த், டிம்.கிருஷ்ணா உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஒட்டு மொத்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நூற்றுக்கணக்கான மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களோடு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, அறப்போர் இயக்கம், டிசம்பர் 3 இயக்கம் உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள வள்ளூவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய திருமாவளவன், சித்தார்த், டிம்.கிருஷ்ணா உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜவாஹிருல்லா, அமெரிக்கை நாராயணன், தெஹலான் பாகவி மற்றும் சில அமைப்பினர் மீதும் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்கள் வலுத்துள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் நடைபெறுவதை அடுத்து, மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆங்காங்கே வாகனங்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களுக்கு சேதம் என வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 15 மாவட்டங்களில் இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மீரட், சம்பல், பரேலி, ஆக்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் இணையதள சேவை முடங்கியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஷபிகுர் ரஹ்மான் பார்க், ஃபெரோஸ் கான் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பல் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 250 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை மக்கள் மீது வலுக்கட்டாயமாக மத்திய அரசு திணிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அமைதியான முறையில் பகுஜன் சமாஜ் கட்சி போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். “குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்தவொரு இந்திய குடிமகனுக்கும் எதிராக ஒரு வார்த்தை அல்லது கோடு கூட இல்லை. மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் புத்திஜீவிகளையும் நான் கேட்கிறேன், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க முயற்சிக்கிறீர்களா?” என்று மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

——-

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் வலுப்பெற்று உள்ளன.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி நெல்லை மேலப்பாளையத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இன்று உலமாக்கள் சபை சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் 800 ஆட்டோ மற்றும் வேன்களும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன.

கோவை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் இரவு முதலே வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். கோவை கோட்டைமேடு பகுதியில் வீட்டில் இஸ்லாமிய பெண்கள் கருப்பு கொடிகளை ஏற்றினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கறுப்புக் கொடி கட்டுவதை தடுக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை நீடித்தது.

——-

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடி ஆலோசித்து வருகின்றனர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.

கிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் உள்ள ஜாபர்பாத் பகுதியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதையடுத்து டெல்லி, அசாம், கர்நாடகா, பிஹார், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குர்ஹான், காசியாபாத் உட்பட டெல்லியைச் சுற்றியுள்ள பிற மாநில பகுதிகளில இருந்து வாகனங்கள் உள்ளே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டை உட்பட சில இடங்களில் கடுமையான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதனால் டெல்லியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குர்கானில் இருந்து டெல்லி வரும் சாலை முழுமையாக முடங்கியுள்ளது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல், இண்டர்நெட் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றியும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Related posts