ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதள தொடர் ..

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதள தொடர் குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் “தலைவி” என்ற படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள தொடரை கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, குயின் ஆகியவற்றை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என்றும், தடை விதிக்க கோரியும் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான ஜெ. தீபா, உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தீபா தரப்பில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை வரும் சனிக்கிழமை வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளதால், தன் மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போது இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு ஆவணங்களை கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், அந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய கவுதம் மேனன் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related posts