ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு என்ற பிரிவு இன்று (05) விசேட சம்மேளன கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த கூட்டத்திற்கு தலைமைத்தாங்கவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த கூட்டத்திற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஒரு சில சந்தர்ப்பவாத அரசியல் குழுவினர் மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று இரவு 7 மணி அளவில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Related posts