ஐ.தே.க தனிமனிதனின் சொத்து அல்ல

ஐக்கிய தேசியக் கட்சியில் எந்தவொரு பிரச்சினை இல்லை எனவும், ஐ.தே.க தனிமனிதனின் சொத்து அல்ல எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையான செயற்பாடுகளை புறந்தள்ளி செயற்பட்டால் ஐ.தே.கவுக்கு மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதன் ஊடாக மக்களின் வாக்குகளை பலவந்தமாக கேட்க முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.

ராகம விகாரையில் நேற்று இடம்பெற்ற வருடாந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

´ஐ.தே.க நாட்டில் உள்ள கட்சிகளில் மிக சக்திவாய்ந்ததாகும். ஆகவே எமது கட்சி சரியான நபரை சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கும். இது குறித்து கவலைப்பட தேவையில்லை. எனவே தன்னிச்சையான செயற்பாடுகளை கைவிட்டு கட்சியாக ஒன்றிணைந்து செயற்பட்டால் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும்.

ஒன்று சேர்த்து பாதுகாப்பது கடினம் எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்கிறோம். கட்சிக்குள்ளும் கட்சியின் செயற்குழுவிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதை மிகுந்த பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

முன்பு பல பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இப்போது இல்லை. நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். ஒழுக்கமாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் இந்த வெற்றியை நாங்கள் பெறுவது உறுதி.

கட்சியின் கோட்பாட்டையும் பாரம்பரியத்தையும் மீறி சிலர் ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட எத்தனிக்கின்றனர். பாரம்பரியம் தெரியாதவர்கள், கட்சியை சீர்குழைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்த கட்சி இரண்டு நபர்களின் சொத்து அல்ல.

ஐ.தே.கட்சி மிக பழமையான கட்சி. நீண்ட வரலாறு மற்றும் வலுவான ஒழுக்கத்துடன் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு கட்சி. அதற்கமைய தொடர்ந்தும் மக்களின் நம்பிக்கையை வெல்ல விரும்புகிறோம். மோதல்களை உருவாக்கவும், மக்களின் வாக்குகளை கட்டாயப்படுத்தி பெறவும் தேவையில்லை.

ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு நபரின் அல்லது இருவர் சார்ந்த விடயமல்ல. இன்னும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆகவே ஏன் இந்த அவசரம்.

வேட்பாளரின் முதிர்ச்சி, பணியாற்றும் திறன் மற்றும் சர்வதேச சமூகத்துடனான அவரது உறவு இப்படி எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு கட்சி ஒரு முடிவை எடுக்கும்.

கட்சியின் ஒரு பொதுவான தீர்மானத்திற்கமைய வெற்றி பெற கூடிய வேட்பாளர் ஒருவரையே நாம் முன்வைப்போம்.

Related posts