நிதி அளிப்பதை நிறுத்தாவிடில் கறுப்புப் பட்டியல்

ஏற்கெனவே ஒப்புக்கொண்டதற்கு இணங்க தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை வரும் அக்டோபருக்குள் தீவிரமாக பின்பற்றாவிட்டால் கறுப்புப் பட்டியலில் இணைப்போம் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை வளர்க்கும் விதமாக தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை தடுப்பதில்லை என்று சர்வதேச நாடுகளிடம் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திவந்தன. இதன் ஒரு பகுதியாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என்று கண்டித்தது.

இது தொடர்பாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை தடுப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம், அந்த உடன்படிக்கையின்படி வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேற்கண்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த தவறினால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடந்த ஜனவரி மற்றும் மே என இரண்டு முறை பாகிஸ்தான் இந்த இலக்கை தவறிவிட்ட நிலையில் இறுதியாக அக்டோபர் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இறுதி கெடு விதித்துள்ளது.

முன்னதாக இந்தியா அளித்த தகவல்களின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானை Grey பட்டியலில் FATF வைத்தது. இதற்கிடையே, இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் கடந்த 13, 14-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் விவகாரத்தை கிளப்பினார். அப்போது, இந்தியாவை பாதிக்கும் தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் இது நடக்குமென்று தெரியவில்லை,’’ என்று கூறினார்.

இதற்கிடையே, கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நிறுவனங்களிடம் முயற்சித்து வரும் பாகிஸ்தானுக்கு FATF-ன் கெடு அச்சுறுத்தலாக அமையலாம். ஏனெனில் அப்படி கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் உலக வங்கி, சர்வதேச நிதியம், ஐரோப்பிய வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளிடம் இருந்து நிதி பெருவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

Related posts