உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 21

தேவபாதுகாப்பில் களிகூரப்பண்ணும் தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால் (உதவியாயிருந்ததினால்), உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் (களிப்படைகிறேன்). சங்கீதம் 63:7

இன்றைய நற்சிந்தனையை விளங்கிக் கொள்ள, சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் உலகம் அறிந்து கொண்ட ஓர் சம்பவத்தை முதலில் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிராக முழுஉலகமும் போருக்குத் தயாரானது. அமெரிக்கா விலும், இங்கிலாந்து தேசத்திலும், யுத்தகாலத்தில் இலங்கையிலும், ஈராக்கில் சதாம் உசையின், லிபியாவில் கடாபி உட்பட, இன்று யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையிலும் (வேறுநாடுகளிலும் கட்டினார்களோ எனக்குத் தெரியாது) பயங்கரவாதிகள் அணுவாயுதங்களைப் பாவித்தால் நாட்டை ஆளுபவர்கள், அரசியல் தலைவர்கள், பெரிய கோடீஸ்வரர்கள் இப்படியாக பலர் தப்பிக்கொள்வதற்கு ஏதுவாக பூமிக்கு அடியில் பதுங்கு குழிகள் மிகப்பாதுகாப்புடன் கட்டப்பட்டன. தேவனுக்கு நன்றி, அவ்வாறான அழிவு இன்றுமட்டும் ஏற்படாமல் தேவன் உலகத்தை காத்தருளியதற்காக.

அப்படி ஓர் அழிவு வந்தால் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் ஓர் பதுங்கு குழியொன்றை, மாளிகைபோல பெருமளவு செலவில் கட்டிமுடித்தார். அதை ஆசீர்வதிக்கும்படியாக ஓர் தேவ ஊழியரிடம் அழைப்புக் கொடுத்தார். அவரும் அழைப்பை ஏற்று அதனை ஆசீர்வதிக்கும்படியாக அங்கு சென்றார்.

அங்கு வந்த தேவஊழியர், நான் இதைவிட குறைந்த செலவில், அதிக உறுதியோடு வேறு ஒரு மறைவிடம் அமைத்திருக்கிறேன் என்றார். கோடீஸ்வரனுக்கு ஏற்பட்ட ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளவிடமுடியாததாய் இருந்தது. எங்கே இருக்கிறது அந்த மறைவிடம்? என்று கேட்டார். அமைதியோடு அந்தப்போதகர் தனது வேதப்புத்தகத்தை திறந்து சங்கீதம் 91ம் அதிகாரத்தை திறந்து காட்டினார்.

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி, நீர் என் அடைக்கலம், என் கோட்டை, நான் நம்பியிருக்கிறவன் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாளாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். வசனம் 1-4. (வேதப்புத்தகம் உள்ளவர்கள் முழுஅதிகாரத்தையும் வாசித்து அறிந்து கொள்ளவும்.) இப்படித்தான் உன்னதமானவரின் நிழலில் அடைக்கலம் புகுந்தேன் என்றும், அவருடைய செட்டைகளே தனது நிழல் என்றும் விபரித்து கூறியபொழுது அந்த கோடீஸ்வரர் வாயடைத்து நின்றார்.

இன்று நாமும்கூட பணத்தினாலும், ஆட்பெலத்தாலும், அந்தஸ்த்து, கல்வித் தகமைகளாலும், போராட்டங்களாலும் பாதுகாப்பு வரும் என்று தவறாக நினைத்து வாழ்ந்து வருகிறோம். (இது தவறு என்று ஒருசிலர் மட்டும் இன்று ஒத்துக் கொள்கிறார்கள்). இவ்வாறான சிந்தனையை தேவன் மிகவிசனத்தோடு கண்டிக்கிறார்.

இந்த உண்மையை நாம் ஏசாயா 30:2 இல் அவதானிக்கலாம். என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று (அதாவது தேவ பக்தியற்ற வாழ்வு வாழ விரும்பி சுயமாக ஒதுங்கும் இடம்), எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய (தகுதியற்ற, தேவ பாதுகாப்பற்ற இடத்திற்கு) முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த தேவனின் பரிதவிப்பை இன்னும் அதிகமாக வேதத்தில் வாசித்து உணர விரும்பின் உபாகமம் 32:1-35 வரை வாசிக்கவும்.

தேவனுக்குப் பிரியமானவர்களே, நமது தேவன் மகாகிருபை உள்ளவர். அதனால் தாவீது என்கிற பக்தன் இவ்வாறு பாடுகிறான். தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் (உமது கிருபையினால்-தகுதியற்ற மக்களுக்கு காட்டும் அன்பினால்) மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். சங்கீதம் 36:7.

நாம் பாவம்செய்து தேவமகிமையை இழந்து நரக ஆக்கினைக்குட்பட்ட வேளையில் தேவன் நம்மீது வைத்த அன்பின் மிகுதியால் இயேசுவை உலகிற்கு அனுப்பி, சிலுவை மரணத்தின் மூலம் எம்மை மீட்டெடுத்து தமது நிழலில் வந்தடையும் சிலாக்கியத்தை நமக்கு தந்துள்ளார். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவசிக்கிறவன் எவனே அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) அவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் யோவான் 3:16.

நமது தேவனின் குணாதிசயத்தைக் குறித்து வேதம் இவ்வாறு கூறுகிறது. கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் (தேவன்) ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர் என்று. ஏசாயா 25:4.

இந்த அமைதியான வாழ்க்கையைத் தரும் தேவனிடம் எமது வாழ்வை ஒப்புக் கொடுப்போமா. அப்படி நாம் தேவனிடம் எமது வாழ்வை ஒப்புக்கொடுக்கும்போது, தேவன் தமது ஆசீர்வாதத்தால் (பாதுகாப்பால்) எங்களை காத்துக்கொள்வார். தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி (தேவனை அறிகிற அறிவிலே வளரப்பண்ணி), என்னைத் தமது அம்பாறாத்து}ணியிலே (ஏற்றகாலத்தில் உயர்த்தும்படியாக) மூடிவைத்தார். ஏசாயா 49:2.

தேவனிடத்தில் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, தேவ பாதுகாப்புடன் அமைதியாக வாழ என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஒப்புக்கொடு.

அன்பும் இரக்கமும் கிருபையும் உள்ள நல்ல தகப்பனே, இன்று உமது நிழலின் ஆறுதலை அறிய உதவியதற்காக நன்றி அப்பா. உமது நிழலை அறியாமல் வாழ்ந்து வந்த நாட்களுக்காக என்னை மன்னியும். இன்றிலிருந்து என்னை உமது பிள்ளையாக ஏற்று, உமது நிழலில் வைத்து என்னைக் காத்துக்கொள்ளும் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts