மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து மாற்றப்படுவதாக எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிச்செல்வதுபோல் ஊடகங்களில் வெளியான காட்சிகள் உண்மையல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது.

மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி நடந்து முடிந்தது. இதனையடுத்து வருகிற மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுக்கு வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் முடிந்து வெளியான கருத்து கணிப்பில் பா.ஜ மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக புகார்

வட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக பரப்பரப்பு நிலவி வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு ஏற்றி வந்த வாகனங்களை கையும் களவுமாக பிடித்த எதிர்க்கட்சியினர் பாஜகவிற்கு சாதகமாக தேர்தல் முடிவுகளை மாற்ற சதி நடப்பதாக குற்றம் காட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் 22 எதிர்க்கட்சிகள் புகார் மனு

இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், காங். உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவை வழங்கினர். இந்த மனுவில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது முரண்பாடுகள் தென்பட்டால், அந்த தொகுதியில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை

இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் மிகவும் புனிதமானது ;அதில் எவ்வித சந்தேகத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்று கூறிய அவர், இதுகுறித்த வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் விளக்கம்

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சர்ச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

* உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பான நிலையிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

*வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பான அறையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் 2 முறை தாழிடப்பட்டு சீலிடப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

*இந்த பணிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 24 மணி நேரமும் காவலுக்கு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

*இதனைத் தொடர்ந்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்வது போன்று சமுக வலைதளங்களில் வெளியான காட்சிகள் பொய்யானது என்று தலைமை தேர்தல் ஆணையம் எடுத்துரைத்துள்ளது.

*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் 93 கூட்டங்களை நடத்தி உள்ளது என்று குறிப்பிட்ட ஆணையம், அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் நடைமுறை குறித்து கட்சிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

*மேலும் ஊடகங்களில் காட்டப்பட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டவை பயன்படுத்தப்படுத்த படாத வாக்கு இயந்திரங்கள் என்றும் மாற்று ஏற்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களையும் பொறுப்புடன் கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Related posts