உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 19

எக்காலத்திலும் சந்தோசம்தரும் தேவனைச் சார்ந்துகொள்ளுவோம்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப் படுவார்களாக. சங்கீதம் 40:16.

இன்றைய இலங்கையின் நிலையை சற்று சிந்தித்துப்பார்ப்போம். அமைதியுடன் வாழ்ந்த நாட்கள், குடும்பஉறவுகள் நிகழ்வுகள், வாழ்வின் முற்னேற்றத்திற்கான வழிகள், கல்வித்தரத்தின் உயர்வு இப்படிப் பலநிகழ்வுகள். ஆனால் இன்று எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. வேதனை வேதனை.

வேதப்புத்தகத்தின் பழையஏற்பாட்டை நாம் வாசித்துப் பார்த்தால், எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலர் முதல் தடவையாக தம்மை மறந்து சந்தோசமாக இருந்தது சீனாய் மலையடிவாரத்தில் என்று காணலாம். அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை கிடைத்தாலும், எகிப்தியர் பின்தொடருவார்களோ என்ற பயம் இருந்தது. சிவந்த சமுத்திரத்தை கடந்தபோதும் என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தது.

மன்னாவை சாப்பிட்டு, கன்மலையின் தண்ணீரை அருந்தியபிற்பாடு மனப்பெலன் உண்டாயிருந்தது. தேவன் அவர்களின் சகல தேவைகளையும் நிறைவாக்கி வழி நடத்தினார். அதன் நிமித்தம் மலையில் ஏறி தேவனுடன் இருந்த மோசே வரத்தாமதித் ததனால் மலையடிவாரத்தில் தம்முடைய பழைய தெய்வங்களுக்கு பண்டிகை செலுத்தி மகிழ்ச்சியாக, சந்தோசமாக இருந்தனர்.

இதை நாம் யாத்திராகமம் புத்தகத்தில் காணலாம். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதான பலிகளைச் செலுத்தினார்கள். பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயைநோக்கி, நீ இறங்கிப்போ, எகிப்து தேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டு வந்த உன்ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு, இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார். அதிகாரம் 32:6-8 (முழு அதிகாரத்தையும் வாசிக்கவும்).

இஸ்ரவேலருக்கு அத்தனை சந்தோசம். அதிகாலையிலே எழுந்து விட்டார்கள். கடந்து வந்த காலங்களை மறந்து விட்டனர். விடுதலையின் தேவனை மறந்தனர். அழைத்து வந்த மோசேயை மறந்தனர். ஆனால் அவர்கள் சந்தோசமாக இருந்தனர். அந்தசந்தோசம் நிலைத்து இருந்ததா? அன்றைய தினமே மூவாயிரம்பேர் தமது சகோதரராலே கொல்லப்பட்டார்கள். காரணம் தேவ சந்நிதியிலே இருந்த மகிழ்ச்சியை உதாசீனம் செய்து, தமக்குத் தாமே மகிழ்ச்சியை, சந்தோசத்தை ஏற்படுத்திக் கொண்டதனால்.

அந்த மகிழ்ச்சியை இழந்த தேவனுடைய ஜனத்திற்கு மீண்டும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்படியாக பிதாவாகிய தேவன் தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது இழந்துபோன தேவனுடைய சந்தோசத்தை மீண்டும் மக்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளும் படியான வழியை அறிவிக்க, அதன்படி அழைத்துச் செல்ல.

அதை நாம் யோவான் 15:4-11. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன். கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திரா விட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனி கொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்.

என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான். அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள், அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என்வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது உங்களுக்குச் செய்யப் படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என்பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்.

என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என்பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் (தேவனிடத்தில் இருந்து வரும் நன்மைகளால்) நிறைவாயிருக்கும் படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

பிரியமான வாசகநேயர்களே, இன்று உங்களின் சந்தோசம் எதனிடத்தில் உள்ளது. அழியும் பொருட்களிலும், மனம்மாறும் மனிதரிடமா? அல்லது மனம்மாறத தேவனிடமா? இன்று எதைத் தேடுவது எதைத் தேடாமல் இருப்பது என்பது மானிடரான எமக்கு தடுமாற்றமாக உள்ளது. ஆனால் சம்பூரணராகிய தேவன் தம்மையே தந்து நம்மை நிறைத்தார். அதை மறந்து இன்று உலகம் எதையெதையோ தேடுகிறது. அப்படியாயின் சந்தோசம் எப்படி வரும். இல்லாததைத் தேடுவதை விட்டு நம்மைத் தேடி உலகிற்கு வந்தவரை தேடுவோம். சகல சந்தோசமும், மகிழ்ச்சியும், நிறைவும் அவருக்குள் நிறைவாய் நிச்சயமாய் எமக்குக் கிடைக்கும். அது நம்மை விட்டு ஒரு போதும் எடுபடாது.

அன்பின் பரலோக பிதாவே, உம்மிடத்தில் உள்ள நிலையான சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் குறித்து எனக்கு இன்று தெரிந்து கொள்ள உதவியதற்காக நன்றி அப்பா. நான் உம்மைத்தேடி உமது சந்தோசத்திற்குள் நிலைத்திருக்க உதவி செய்யும். எனக்கு முன்பாக உள்ள சூழ்நிலை காரணமாக நான் உம்மை விட்டு விலகிவாழாமல் உம்மையே அண்டிவாழ உதவிசெய்து காத்துக்கொள்ளும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts